Share

Apr 5, 2018

பாம்பறியும்


நத்தம் ரோட்டிலிருந்த மதுரை எஸ்.பி. (நார்த்) ஆஃபிஸில் ஸ்பெஷல் ஆஃபிசராக இருந்த என் நண்பன் சொன்ன சமாச்சாரம்.
தேனி மாவட்டத்தில் ஒரு போலீஸ் ஸ்டேசன் எஸ்.ஐ  கோர்ட் விஷயமாக மதுரை வந்திருக்கிறார். சொந்த வேலைக்காக பதினைந்தாயிரம் ரூபாய் பணம் யூனிபார்ம் சட்டைப்பையில் வைத்திருந்திருக்கிறார்.
மதுரையில் வேலையெல்லாம் முடித்து விட்டு, அப்போது ரிலீசாகி சென்ட்ரல் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த கமல் ஹாசன் “காக்கி சட்டை” படம் பார்த்து விட்டு ஊர் திரும்புவதாக திட்டம். But life is what happens when we make other plans.
மதுரை பஸ் ஸ்டாண்டில் இறங்கியவுடன் அதிர்ச்சி. பணம் காணவில்லை. யூனிஃபார்ம் பாக்கெட் கிழிந்திருக்கிறது. பஸ்ஸில் இறங்குவதற்கு கொஞ்ச நேரம் முன் கூட பணம் இருக்கிறதை செக் செய்து அறிந்திருக்கிறார். பணம் காணாமல் போய் விட்ட வேதனை. எஸ்.ஐக்கு அவமானம் தாங்க முடியவில்லை. யூனிஃபார்மில் இருக்கும்போது பிக் பாக்கெட் நடந்திருக்கிறது. தைரியமாய் செய்திருக்கிறான்.
Is it an honor for a police officer to be pickpocketed?  Disgrace.
கொஞ்ச நேரம் நடந்த விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் பரபரப்பான பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கிறார்.
பஸ் ஸ்டாண்ட் போலீஸ் பூத்தில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிளிடம் சென்றிருக்கிறார்.
கான்ஸ்டபிள் “ஐயா”
எஸ்.ஐ. தான் மொஃபசல் ஏரியாவில் போலீஸ் எஸ்.ஐ. என்பதை சொல்லி நடந்ததை சொல்லியிருக்கிறார்.
கான்ஸ்டபிள் எந்த ஊர் பஸ்ஸில் இருந்து அவர் இறங்கினார் என்பதை கேட்டு விட்டு அந்த பஸ் நிற்குமிடத்தை உற்று ஒரு பார்வை பார்த்திருக்கிறார். பின் எஸ்.ஐ.யிடம் சொல்லியிருக்கிறார். “ஐயா.. நீங்க இங்க பூத்திலயே இருங்க..நான் ஒரு பத்து நிமிஷத்தில் வந்திட்றேன்.”
கான்ஸ்டபிள் போய் அரை மணி நேரம் கடந்திருக்கிறது. எஸ்.ஐ நகத்தை கடித்து கொண்டு உட்கார்ந்திருந்திருக்கிறார். இன்னும் ஒரு அரை மணி ஓடியிருக்கிறது.
கான்ஸ்டபிள் வேர்க்க விருவிருக்க வந்திருக்கிறார்.
’ஐயா, எவ்வளவு பணம்னு சொன்னீங்க..’
’பதினைந்தாயிரம்’
‘பத்தாயிரம் தான்னு சாதிக்கறானுங்க..’
’பதினைந்தாயிரம்டா’ அழாத குறையாக எஸ்.ஐ. பதில்.

முப்பது வருடங்களுக்கு முந்தைய ’பதினைந்தாயிரம்’ மதிப்பு மிக்க கணிசமான தொகை.

‘ஐயா இன்னக்கி பதினைந்தாயிரம் காணாம போயிடுச்சின்னு நினைக்காதிங்க.. லாட்டரியில உங்களுக்கு ஏழாயிரம் விழுந்திருக்குன்னு நெனச்சிக்கங்க.. காடைய காட்டில விட்டா பிடிக்க முடியுமா?’
’என்னய்யா சொல்ற’
’நான் போறதுக்குள்ள ஆறு பய கைக்கு அமௌண்ட் மாறிடுச்சி. கை மாறும் போது அமௌண்ட் கொறஞ்சி கிட்டே வரும். ஏழாவது பயல நான் பிடிச்சப்போ அவன் கிட்ட இவ்வளவு தான் இருந்திச்சி.’
ஏழாயிரம் ரூபாயை கான்ஸ்டபிளிடம் இருந்து பெற்றுக்கொண்ட எஸ்.ஐக்கு தெளிவாக புரிந்த விஷயம். கான்ஸ்டபிளுக்கும் பங்கு பிரிந்திருக்கிறது.
வேலியே வேலியை மேய்ந்த கதை.

...........................................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.