Share

Apr 1, 2018

வி. நாகையா - வித்யாவதி


வித்யாவதி சினிமாவில் நடிகையாக அக்கா சந்தியாவுக்கு முன்னதாகவே நுழைந்தவர். அவர் தான் பின் அக்காவையும் சினிமா நடிகையாக உதவியவர். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா.
கல்யாண்குமார் என்னிடம் சொன்ன ஒரு தகவல். 1954ல் கல்யாண்குமார் கதாநாயகனாக கன்னடப்படத்தில் அறிமுகமான போது அவருக்கு முதல் படத்தில் ஜோடி வித்யாவதி தான். ஜெயலலிதாவுடனும் கல்யாண்குமார் பின்னால் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
1953ம் ஆண்டு நடிகர் வி.நாகையா தயாரித்த ’என் வீடு’ படத்தில் வில்லியாக வித்யாவதி நடித்தார்.

வாழ்க்கையிலும் இருவரும் இணைந்தனர். நாகையாவின் அபிமான தாரமாக வித்யாவதி ஆகிப்போனார்.
வி. நாகையா கண்ணியமான பாத்திரங்களில் படங்களில் வருபவர்.
1956ம் ஆண்டு ’அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் எம்.ஜி.சக்ரபாணிக்கு ஜோடியாக நடித்தார். விசிறியால் விசிறிக்கொண்டு வரும் வில்லி.
ஃபியட் கார் செல்ஃப் ட்ரைவிங். சிகரெட் புகைத்த நடிகை வித்யாவதி.
சந்தியாவும் வித்யாவதியும் கூட இணைந்து நடித்திருக்கிறார்கள்.
நாமக்கல் சேஷையங்காரின் சிஷ்யர்களில் பிரதானமானவர் சித்தூர் வி நாகய்யா.
நாகய்யா பற்றி ... எம். எஸ் . சுப்புலக்ஷ்மிக்கு ஜோடியாக ' மீரா ' படத்தில் நடித்தவர்.
புஷ்பவல்லிக்கும் ஒரு படத்தில்(கோரகும்பர் ) ஜோடியாக நடித்தவர். அந்த புஷ்பவல்லி -நாகய்யா படத்தில் ஒரு சின்ன ரோல் ஜெமினி கணேசன் செய்திருக்கிறார்.
தெலுங்கு, தமிழ் படங்களில் சிறந்த நடிகராக நாகையா அறியப்பட்டிருந்தார். நல்ல உயரமான நடிகர்.
சொந்தப்படம் எடுக்கிற ஆசை இவரை நஷ்டப்படுத்தி பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பும் நிலைக்கு ஆளாக்கியது.

பின்னால் 1960களிலும் 1970களின் ஆரம்பத்திலும் அப்பா ரோல்,மாமனார் ரோல்களிலும் சாமியார் ரோல்களிலும் தமிழ் படங்களில் வந்து இடைவேளைக்கு முன் அல்லது படம் முடியுமுன் பெரும்பாலும் செத்துப்போவார், பாவம்.
எத்தனையோ நல்ல பாடல் காட்சிகள்.
’சின்ன சின்ன ரோஜா, சிங்கார ரோஜா, அன்ன நடை நடந்து அழகாய் ஆடி வரும் ரோஜா’ குழந்தையாக குட்டி பத்மினி. பி.பி.எஸ். பாடல்.
’நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு’
’அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்பான் கீதையிலே கண்ணன்’

ஒரு பெரியவர் சொன்னார். ஒரு படம் செகண்ட் ஷோ போயிருக்கிறார்.
அந்த படத்தில் நாகய்யா இடைவேளையின் போதோ, அதன் பின்னரோ,என்ன எழவோ நாகய்யா இருமி அழுது கண்ணீர் விட்டு,நடுங்கும் குரலில் உருக்கமாக பேசிவிட்டு வழக்கம்போல செத்துப்போயிருக்கிறார்.
படம் முடிந்து வீட்டுக்கு வந்து இரண்டரை மணி போல இந்த பெரியவர் தூங்கிவிட்டு காலை ஏழு மணிக்கு எழுந்து தினசரியைப் பிரித்தால் மூன்றாம் பக்கம் சின்ன புகைப்படத்துடன் " பத்மஸ்ரீ வி.நாகய்யா மரணம் " என்று செய்தி சின்ன அளவில்.
செய்தி படித்த பெரியவருக்கு அதிர்ச்சி கிஞ்சித்தும் இல்லை. வருத்தமும் கொஞ்சம் கூட இல்லை.
ஒரு ஐம்பது படத்திலாவது நாகய்யாவின் மரணத்தைப் பார்த்து சலித்திருந்த தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு யாருக்குமே இது செய்தியாக அப்போது சலனமேதும் ஏற்படுத்தவே இல்லை.
ஆனால் நாகய்யா பன்முக ஆற்றல் நிறைந்தவர். திரை இசைப் பாடல்களில் கூட இவர் சொந்தக்குரலில் பாடிய " திருமுருகா என ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம் " இன்றும் கேட்கக்கிடைக்கும்.
இப்போது தி நகர் பனகல் பார்க்கில் சிலையாக இன்று நிற்கிறார்!
அசோகமித்திரன் கடைசி கால கதையொன்று ஆனந்த விகடனில் வெளியானது.
நான் அவருக்கு போன் பண்ணி சொன்னேன்.
இதில் முக்கிய கதாபாத்திரம் சித்தூர் வி. நாகையா.
”அடேடே..ஆமாம்” என்றார்.
அந்தக் கதை ‘பாண்டி பஜார் பீடா’
தன்னை சிலாகித்து புகழ்ந்து பேசும் ரசிகனிடம் “இந்த மாதிரி பேச்செல்லாம் நான் நிறைய கேட்டிருக்கேன். இதுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது” என்று சொல்லும் நடிகர் வெங்கையா தான் நாகையா.
’பாண்டி பஜார் பீடா’ கதையில் வரும் சி.எஸ்.ஆர் என்ற ஸ்டார் நடிகர் சி. எஸ். ஆர். பாதாள பைரவியில் மகாராஜாவாக நடித்தவர்.  தெலுங்கு நடிகர்.

‘பாத்திரத்தின் முன் மாதிரியை அடையாளம் கண்டு கொள்வது ஒரு தனித்தேர்ச்சியின் பேரில் வருவது’   
- அசோகமித்திரன் 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.