Share

Dec 26, 2017

ஆச்சி – அப்பாவின் அம்மா


அப்பாவின் அம்மா – என் ஆச்சிக்கு பனங்கிழங்கு என்றால் உயிர். வள்ளியம்மா என்ற பெயர் கொண்ட ஆச்சியை புதுக்குடியா என்று தான் செய்துங்கநல்லூரில் அடையாளம் சொல்வார்கள்.
பனங்கிழங்கு விற்பவனை கண்டால் காலிலுள்ள மெட்டியை கழட்டி கொடுத்து விட்டு பனங்கிழங்கு வாங்கி விடும் புதுக்குடியா.
1930,1940களில் கையில் பணம் இருந்தால் தான் வாங்கல் கொடுக்கல் என்று கிடையாது. பெரும்பாலும் பண்டமாற்று.
திருச்செந்தூரில் இருந்து வந்திருந்த ஆச்சியின் மூத்த சகோதரியின் மகன் செம்புகுட்டியை ரயில் ஏற்றி விட ஸ்டேசன் வந்த ஆச்சி. எனக்கு செம்பு குட்டி பெரியப்பா.
ஆச்சி “ எலெ செம்புகுட்டி, அக்காள நல்லா கவனிச்சிக்க. இன்னா திருச்செந்தூர் ட்ரெயின் வருதுல….” இப்படி சொல்லிக்கொண்டே பக்கத்தில் பனங்கிழங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு ஆளிடம் “யய்யா, எனக்கு கொஞ்சம் கொடேன்” என்று சௌஜன்யமாக கேட்டிருக்கிறாள். அந்த ஆளும் தான் தின்று கொண்டிருந்த பனங்கிழங்கிலே பின் பகுதியை ஒடித்து கொடுத்திருக்கிறான்.
இதை கவனித்த செம்புகுட்டி பெரியப்பா திருச்செந்தூர் போனதும் ஒரு பெரிய கூடை நிறைய பனங்கிழங்கை தன் அம்மைக்காக ஒரு ஆள் மூலம் கொடுத்து அனுப்பினாராம்.
…………………………………………….


ஒன்றாம் வகுப்பு மே மாத விடுமுறையில் ஆச்சியும் நானும் திருச்செந்தூருக்கு செய்துங்க நல்லூரில் இருந்து பஸ் பயணம். ஐயர் ஓட்டல் முன் தான் பஸ் ஏறினோம்.
பஸ் பயணம் எனக்கு சிறுவனாய் இருக்கும்போது ஒத்துக்கொள்வதில்லை. வாந்தியெடுத்தேன். ஆச்சி சேலையால் என் வாயை சுத்தம் செய்தாள்.
கொஞ்ச நேரத்தில் நான் ரொம்ப கிறங்கிப்போனேன்.
ஆச்சிக்கு பஸ் டிரைவர் மேல் கோபம் வந்து விட்டது.
கண்டக்டரிடம் சொன்னாள் “ ஏலே, அவன் என்னல வண்டி ஓட்டுதான்? இங்க பாருல.. என் பேரன் என்ன பாடு படுதான் பாரு. ஏல.. திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட்ல என் மகன் செம்புகுட்டி உங்க நெளுசல கழட்டிருவாம்ல… என் பேரனுக்கு ஏதாவது ஆச்சுன்னா பாத்துக்க..”
திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டிலே செம்புகுட்டி பெரியப்பா கடை. இறங்கவுமே குதிரை வண்டி வச்சி வீட்டுக்கு எங்கள அனுப்பினார். செம்புகுட்டியா பிள்ளை பெரியப்பா திருச்செந்தூர் சண்டியர். காதில் கடுக்கன் போட்டிருப்பார். நெற்றி திருநீறு,குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
திருச்செந்தூர் கோவிலுக்கு மறு நாள் மாலை ஆச்சி என்னை கூட்டிக்கொண்டு போனாள். “முருகா! முருகா!” என்று அதீத பரவசத்துடன் சன்னதம் வந்தது போல சாமி கும்பிட்டாள். எனக்கு பயமாக கூட இருந்தது. வேண்டுதல்களை எல்லாம் எல்லோருக்கும் கேட்கும்படியாக வாய் விட்டே சொன்னாள். தனக்கு பிடிக்காத உறவினர் ஒருவருக்கு தண்டனை வேண்டினாள் ” பவுண்டு வீட்டுக்காரன ஜெயிலுக்கு அனுப்பு முருகா! எப்பவும் எசளி பண்ணிக்கிட்டே இருக்கான்.அவன் நல்லவனே இல்ல பாத்துக்க” என்றாள்.
………………………………………






.........................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.