Share

Oct 8, 2017

ராப்பிச்சை வாலியும் வைத்து என்ற வைத்தியநாதனும்


’வாலி’ ந.முத்துசாமி சிறுகதை.
இந்த கதை பற்றி முத்துசாமி சார் சொன்னார். இந்த கதையை எந்த பத்திரிக்கையில் எழுதினார், எப்போது எழுதினார் என்பது இப்போது அவருக்கு நினைவில் இல்லை.

வாலி ராப்பிச்சைக்காரன். புஞ்சையில் இரவில் பிச்சையெடுப்பவன். 
கண் பார்வையில்லாதவன். 
வாலியுடன் எப்போதும் கூடவே ஒரு நாய் இருக்கும்.

ஊர் சின்ன பசங்களுக்கு ஒரு விளையாட்டு. இவன் சோற்றில் மண் போட்டு விடுவார்கள்.

புஞ்சையில் ஒரு கோவில். அங்கே உத்ராபதியாகிய பைரவத்தொண்டருக்கு சாப்பிட சிறுத்தொண்ட நாயனார் தன் மகன் சீராளனை பலியிட்டு கறி சமைத்து கொடுத்த கதையை முன்வைத்து ஒரு விழா எடுப்பார்கள்.

பிள்ளைக்கறி அமுது படையல். குங்குமப்பூ, பச்சை கற்பூரம், அரிசி மாவு கொண்டு செய்யப்படும். சீராளம் என்று அதற்கு பெயர்.

முத்துசாமி சார் நினைவின் அடுக்குகளில் காலம் என்னும் கருமேகம் மூடியுள்ள பகுதிகளில் இருந்து புஞ்சை விரியும். முதலியார்கள் தெரு, வடுவத்தெரு மேலண்டை பகுதி, வடக்கு வீதி…..

மாவில் செய்த ‘சீராளம் பொம்மை’. புத்திர பாக்யத்திற்கு சீராளம்.
இந்த சீராளம் பற்றி ஒரு ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இந்த சீராளம் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும். முத்துசாமி சாரின் பெரியப்பாவுக்கு புத்ர பாக்யம் கிடையாது. அதனால் ராப்பிச்சை வாலி கோவிலில் இருந்து அந்த சீராளம் வாங்கி  வந்து பெரியப்பாவுக்கு சாப்பிடக்கொடுப்பான்.

பகலில் பிச்சை போட்டால் அந்த உணவுக்கு பெயர் ‘சேஷம்’.
ராப்பிச்சை வாலி பகலில் பாவாடை முதலியார் வீட்டில் தான் இருப்பான்.

இந்த ’வாலி’ கதை முத்துசாமியின் தொகுப்பில் கிடையாது. இது எப்படி விட்டுப்போச்சி என்று அவ்வப்போது தவிப்புடன் சொல்வார்.

இந்த கதை யாரிடமாவது கிடைக்குமா? பழைய இலக்கிய சிறு பத்திரிக்கைகளில் ஏதோ ஒன்றில் இந்த கதை பிரசுரமாகியிருக்கிறது. கண்டு பிடிக்க முடிந்தால் Serendipitious happy discovery!
…………….

முத்துசாமி சார் எழுத நினைத்து ஒரு கதை தள்ளி தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. வைத்து என்கிற வைத்தியநாதன்.
வைத்து முத்துசாரின் பால்ய நண்பன். ஐந்தாம் வகுப்பில் உடன் படித்தவன். மிகவும் புத்திசாலி பையன். படிப்பில் மிகவும் கெட்டி.
மஹாலிங்கம் வீட்டுக்கு மேலண்டை வீட்டில் குடியிருந்த வைத்து குடும்பம். வைத்துவின் அப்பாவுக்கு குஷ்டரோகம். வருமானம் இல்லாமல் வைத்து அம்மா கல்யாண சமையல்களுக்கு ஒத்தாசையாக வேலைக்கு போய் கிடைப்பதை கொண்டு வருவார்.

இந்த வைத்து சிறுவனாய் இருக்கும் போது ஒரு திடுக்கிடும்படியான காரியம் செய்தான். முத்துசாமி சாரின் பெரியப்பாவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த காசிப்பாட்டியை பேனாக்கத்தியால் பல முறை குத்தி விட்டு காசை எடுக்கப்பார்த்திருக்கிறான்.
வைத்துவுக்கும் குஷ்டம் இருந்திருக்கிறது.

இந்த வைத்து என்ற வைத்தியநாதனை முத்துசாமி காலம் கடந்த பின் பார்த்ததே கிடையாது.
இவனை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்திருக்கிறது.

வைத்துவை பல வருடங்கள் கழித்து சந்திப்பது போல கதையில் கற்பனைக் காட்சியை கொண்டு வருகிறார். வைத்து நல்ல ஸ்திதியில் வசதியானவனாக மீண்டு வருகிறான். அவனுடைய குஷ்டம் குணமாகியிருக்கிறது.
வைத்து முத்துசாமியிடம் குஷ்டத்திற்கு நவீனமருந்து பெயரை சொல்லி 
“ ’டேப்சோன்’ எனக்கு தெரியாதென்றா நினைக்கிறாய்?”
வைத்து என்கிற வைத்திய நாதன் கதையை எப்படியாவது முத்துசாமி சாரை எழுத வைத்து விடவேண்டும்.

‘நீங்கள் சொல்லுங்கள். சொல்ல சொல்ல நான் எழுதுகிறேன்.’ கேட்டுப்பார்த்து விட்டேன். சார் நிச்சலனமாக புன்னகைக்கிறார். கண்கள் அந்தப்படைப்பின் புதிர் பிரதேசங்களை தேடுகின்றன. மீசையை இரு புறமும் தடவிக்கொள்கிறார்.
இது வரை அவருடைய படைப்புகள் அனைத்தையும் தன்  கைப்படத் தான் எழுதியிருக்கிறார்.

பார்ப்போம்.


……………………………………………………………………….

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.