Share

Mar 15, 2017

சேல்ஸ்மேன் அஸ்கார் ஃபர்காதி இயக்கிய ஈரானிய படம் ‘சேல்ஸ்மேன்.’

ஈரானிய படங்களின் தரம் உலகளவில் உயர்த்திப்பிடிக்கப்படுகிறது. ஆஸ்கார் விருது கிடைத்த விஷயம் பெரிய ஆச்சரியமல்ல. கேன்ஸ் விருது எதற்கெல்லாம் இந்தப்படத்திற்கு கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.
கணவனும் மனைவியும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்ஸ். அதோடு கதாநாயகன் ஒரு நல்ல பள்ளியாசிரியரும் கூட.
அவர்கள் நடிக்கிற ஆர்தர் மில்லர் நாடகமும்( Death of a salesman) சேல்மேன் படத்தின் கதையும் இசைந்து இயல்பாய் நடக்கிறது.

ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் அரண்மனைக்கு வரும் நடிகர்களை டென்மார்க்கின் அந்த நேர அரசியலை உள்ளடக்கிய கதையால் இயங்கச் செய்வது நினைவுக்கு வருகிறது.

சேல்ஸ்மேன் நாயகன் ஷஹாப் ஹொசைனியும் நாயகி தாரானெ அலிதூஸ்ட்டியும் படம் துவங்கும் போதே வீடு மாற்றும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். இடிந்து விழும் குடியிருப்பிலிருந்து அவசர, அவசரமாய் தப்பிக்கிறார்கள்.

புதிதாய் ஒரு அப்பார்ட்மெண்டில் இவர்கள் குடியேறும் ஃப்ளாட்டின் முந்தைய டெனண்ட் படத்தில் காட்டப்படுவதில்லை. அந்தப் பெண் ஒரு செக்ஸ் ஒர்க்கராய் இருந்திருக்கிறாள்.

வீட்டை மாற்றுவது என்பதே எப்போதும் மிகுந்த மன உளைச்சல் தந்து விடுகிறது.
வீடு மாற்றும் நிர்ப்பந்தமும் புதிய வீட்டின் சூழலும் தான் எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

முன்னதாக குடியிருந்த அந்தப்பெண் அந்த வீட்டில் ஒரு அறையில் தன் பொருட்களை வைத்து விட்டுத் தான் வெளியேறியிருக்கிறாள். அவள் எப்போது அந்தப் பொருட்களை காலி செய்யப்போகிறாள்?அவளுக்கு இன்னும் வீடு கிடைக்கவில்லை. ஒரு வசனத்தில் இந்த சோகம் கோடிட்டு காட்டப்படுகிறது. அந்தப் பரிதாபத்திற்குரிய பெண் எங்கு தங்கியிருப்பாள்?இந்த முந்தைய டெனண்ட் ஒரு காட்சியிலும் காட்டப்படவேயில்லை!

இந்த நிலையில் பழைய செக்ஸ் வொர்க்கர் இன்னும் அங்கே தான் வசித்துக்கொண்டிருக்கிறாள் என்று நினைக்கும் அவளுடைய கஸ்டமர் – இவர் ஒரு வயதான மனிதர்- இந்த வீட்டில் நுழைந்து கதாநாயகியை பார்க்க நேரிடும் ரசாபாசம் என்ன மாதிரியான பயங்கரக் கனவாக அந்தப் பெண்ணுக்கு இருந்திருக்கும். விபரீத விளைவு. இருவருக்கும் காயங்கள். பதறியடித்துக்கொண்டு தப்பித்துத் தான் அந்தப் பெரியவர் வெளியேறியிருக்கவே முடியும். படத்தின் இந்த முக்கிய நிகழ்வும் கூட காட்சிப்படுத்தப்படவில்லை.
இந்த துயர நிகழ்வு அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி மேடை நாடகத்தில் நடிக்கும் போது கூட அவள் நிலை குலைந்து போகிறாள்.
கணவன் போலீஸில் கம்ப்ளைண்ட் செய்யாமல் குற்றவாளி விட்டுச்செல்லும் வேன், போன் இவற்றை வைத்து யார் என்று கண்டு பிடிக்க முயற்சி செய்கிறான்.

பொறியில் சிக்கும் பெரியவர் தான் Intruder என்பதை கண்டு பிடித்து ஹீரோ அவமானப்படுத்துகிறான். அவருடைய குடும்பத்தை வர வைக்கிறார். முப்பத்தைந்து வருடங்கள் அவருடன் வாழ்ந்த நோயாளியான முதிய மனைவிக்கு இவருடைய இழிவை வெளிச்சம் போட்டு காட்ட நினைக்கிறான். பாதிக்கப்பட்ட ஹீரோயின் இப்படி பழி வாங்க நினைக்கும் கணவனை கண்டிக்கிறாள்.

அந்த முதியவரோ தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார். மன்றாடுகிறார்.

“ பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே, செய்த பாவம் தீரும் முன்னே இறக்க வைக்காதே.”
- ’என்ன தான் முடிவு’ படத்தில் டி.எஸ்.பாலையா இப்படி தேம்புவார்.
..............................................

No comments:

Post a Comment