Share

May 23, 2017

அரிப்பெடுத்து அருவாமனையில ஏறுனா...


ரஜினியின் பிரகடனம் – ’அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். போருக்கு தயாராகுங்கள்.’

அரிப்பெடுத்து அருவாமனையில ஏறுனா யாருக்கு நஷ்டம்?

 ’கீழ்த்தரமான தமிழர்கள்’ என்று நீ சொன்னால் உடனே,உடனே ஒரு சல்லிப்பயல் ‘மராட்டிய நாயே’ என்று தானே பதிலடி கொடுப்பான்?

ரஜினி அரசியலுக்கு அவருடைய உடல் நிலையே முதல் எதிரி. முதல் எதிர்ப்பு அவருடைய சீர் குன்றிய உடல் நிலை மூலமே என்பது எப்படி மூலதனம் ஆகக்கூடும்?

சிங்கப்பூர் வைத்தியத்தில் மீண்ட ரஜினி. சினிமாவில் அதன் பிறகு இவரை வைக்கோல் கன்றுக்குட்டியாக வைத்துக்கொண்டு பணம் கறக்கிற வேலை நடந்தது. இப்போது வாக்கு கறக்க பயன்படுத்த முடியுமா என்றும் பரிசோதனை ஆரம்பம்.

ரஜினியின் எச்சரிக்கை – ‘பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்களை பக்கத்திலேயே நெருங்க விடப்போவதில்லை.’
அவர் வீட்டுப்பெண்கள் மூலம் தான் அவருடைய இந்த எச்சரிக்கைக்கு ஆபத்து இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இவர் கௌரவத்திற்கு பங்கமாக அகலக்கால் வைத்து மனைவி, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் பொருளாதார சிக்கல்களை எப்படியெல்லாம் உண்டாக்கி சிரமப்படுத்தியிருக்கிறார்கள்.

விஜயகாந்தை விட ரஜினி  நூறு மடங்கு மேல். செல்வாக்கு, அந்தஸ்து, பிரபலம் என எப்படிப் பார்த்தாலும் ரஜினி சினிமா நடிகராகவே ரொம்ப,ரொம்ப பெருமைப்படும்படியான நிலை தான்.
அரசியல் பிரமுகராகவே தே.மு.தி.க தலைவரை விட இவருக்கு யோக்யதை அதிகம்.


இப்படி சொல்வது ரஜினிக்கான சிவப்பு கம்பளமல்ல.
எந்த செல்வாக்குமேயில்லாமல், தகுதியுமில்லாமல் அரசியல் உலகில் விஜயகாந்த் தமிழகத் தலைவர்களை பயமுறுத்த முடிந்திருக்கிறது. ரஜினிக்கென்ன? தங்காத்து!

ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதை தமிழக மக்கள் ரொம்ப வருடங்களுக்கு முன்னரே விரும்பவில்லை.

1996ல் அரசியல் மாற்றத்துக்கு தன்னை காரணமாக அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்ளும் ரஜினி 2004ல் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக வாக்களிக்கச் சொன்ன போது என்ன நடந்தது என்பதை ஏன் கவனமாக மறக்க வேண்டும். Selective Amnesia!

அதிமுக, திமுக இருதுருவ அரசியலை அசைக்க முடியுமா?
மெரினா கடற்கரை கிளர்ச்சி, நெடுவாசல் போராட்டம், தாஸ்மாக் கடைகளின் மீதான தாய்மார்களின் ஆவேச தாக்குதல் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. மயிலிறகால் வருடுவது போல நம்பிக்கைக் கீற்று தெரிகிறது.

இந்த நிலையில் ’வந்தேன்டா, புது ஆட்டம் கட்டி ஆடப்போறேன்’ என்று ரஜினியின் எண்ட்ரி?
’கண்ணால் கண்டதை சொல்லாவிட்டால் கத்தியால் வெட்டுவான் பாதர் வெள்ளை’ என்று அடுத்த கூத்து துவங்குகிறது.
புது கனவு, புது பாதை, காட்டப்போவதான பாவ்லா.
உட்டோப்பியா, எல் டொரடா கானல் அரசியல்.எம்.ஜி.ஆரை பார்த்து அரசியலில் இது வரை பொல்லாச்சிறகை விரித்த சினிமா நடிகர்களின் வரிசையில் இன்று ரஜினி!
மற்ற நடிகர்கள் போல் வெத்து வேட்டு அல்ல. விஜயகாந்த், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் போல வெத்து வேட்டு அல்ல என்றாலும் ரொம்ப லேட்டு.


இப்பவே ஒரு ஜாதிக்கட்சி தலைவர் பதற்றத்துடன் தூண்டில் போடுகிறார் -’பி.ஜே.பியில சேர்ந்திடாதீங்க’
அமித் ஷா பிஜேபியில சேரச்சொல்கிறார்.

எப்படியோ! தமிழர்கள் ’பப்பள, பள,பள,பள’ ஜிகினா காட்சிகள் காண இருக்கிறார்கள். மீடியா, பிரேக்கிங் நியூஸ் என்று சரியான எண்டர்டெய்ன்மென்ட் காத்திருக்கிறது. ’ஜனங்களின் நல்லதிற்கான கூட்டணி’ கனவுகளுடன் நம் அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாகி அடுத்த ரவுண்டு வருவார்கள். விஜய்காந்தையே தலைக்கு மேல் தூக்கி கொண்டாடிய கம்யூனிஸ்ட்களுக்கும், மற்ற அரசியல் பிழைப்பவர்களுக்கும் ரஜினி பெரிய ரட்சகராயிற்றே!

தும்பிக்கய ஊனி, நாலு காலையும் மேல தூக்கி சங்கு சக்கரமா, பம்பரமா சுத்தினால், வேடிக்கை பார்க்கும் பொது ஜனங்கள், கட்சிகளின் தொண்டர்கள் எல்லோருமே கைய தட்டி ஆரவாரம் செய்து, ’வாழ்க’ கோஷம் போட்டு குஷியாகி விட மாட்டார்களா?
தனி மனித வழிபாட்டு குதூகலத்திற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

.........................................................

http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_07.html


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_4726.html

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_28.htmlMay 21, 2017

நடப்பு

’ரஜினி அரசியல்’ அற்புத விளக்கா?  
வைக்கோல் கன்றுக்குட்டி!

ரஜினியே கூட வைக்கோல் கன்றுக்குட்டி தான்.
……………………………………………………………….


விகடன் தடம் இந்த மாத இதழில்இன்னும் சில சொற்கள்”.
கேள்விகள் கேட்கப்படும். அதற்கு ஒவ்வொரு இதழிலும் பழுத்த எழுத்தாளர் ஒருவர் பதில் சொல்லும் பகுதி.
சிற்பியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி
அசோகமித்திரன்?
பதில்இருபது வருடங்களாக இறந்து கொண்டிருந்தவர்.’


விசித்திரமாக இப்படி கூடவா ட்ரிப்யூட்?

வானம்பாடி தானே சிற்பி.
.......


எனக்கு என்னவோ ஆரம்பத்துல இருந்தே கவிதைகள் மேல ஈடுபாடு இல்லைஎன்று எப்போதும் அசோகமித்திரன் சொல்லிக்கொண்டிருந்தவர்.
ஞானக்கூத்தன், ஆத்மா நாம் கவிதைகளையாவது கொஞ்சம் பாராட்டியிருந்திருப்பார்.
சிற்பி ஒரு கவிஞர் என்பது நிச்சயம் தெரிந்திருந்திருக்கும்!
...............................................

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_28.html

http://rprajanayahem.blogspot.in/…/ashokamitrans-letter-to-…

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_27.html

http://rprajanayahem.blogspot.in/2013/03/blog-post_27.html

http://rprajanayahem.blogspot.in/…/hollow-eye-and-wrinkled-…

May 15, 2017

திருப்பதியில் ந.முத்துசாமி


ந.முத்துசாமி திருப்பதிக்கு போயிருக்கிறார். முழுக்கை ஜிப்பா. மூல விக்ரகத்தை நெருங்கும்போது தேவஸ்தான ஊழியரின் சத்தம் காதில் விழும் - ”ஜர்கண்டி,ஜர்கண்டி”. முத்துசாமியை அந்த ஊழியர் அப்படி சொல்லாமல் நின்று சாவகாசமாக சேவிக்கும்படி மிக நீண்ட நேரம் அனுமதித்திருக்கிறார். ஆனால் விந்தை பாருங்கள்! இவர் வெங்கடாஜலபதியை பூஜிக்கவில்லை.
அந்த இடத்தில் தன் குல தெய்வம் செண்டாடுமையனை நினைத்திருக்கிறார்!
இதனை முத்துசாமி சார் சொன்னபோதில் இந்நிகழ்வில் ஒரு poetic quality இருப்பதாக எனக்கு தோன்றியது.


'செண்டாடுமையன் துணை' சிறுகதையில் ந.மு. சொல்வது
“ அவர்கள் கடவுள்களில் ஒருவராகச் செண்டாடுமையனை நினைக்கிறார்கள். நான் அவனை எங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கிறேன். எல்லா தெய்வங்களுமே மனிதர்களைப் போலத் தான் என்று எனக்குத் தெரியுமாதலால் நான் ஏன் அவர்களை நம்ப வேண்டும்?”

“ வினவு தெரியாமல் செண்டாடுமையன் என் மனோதத்துவத்தில் ஆழப் பதிந்திருந்த போதிலும் சற்றுக் கூடுதலாக நற்றுணையப்பன் என் ஆளுமையை வகுத்திருக்கிறான் போலும்”

புஞ்சையில் உள்ள நற்றுணையப்பன் கோவிலை ஆதித்ய கரிகாலன் கட்டியிருக்கிறான். இவனை சூழ்ச்சி செய்து நான்கு பிராமணர்கள் மூலம் கொன்று விட்டுத் தான் ராஜராஜ சோழன் மகுடம் சூட்டிக்கொண்டான்?

.................


.................

http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_5.html

http://rprajanayahem.blogspot.in/2015/12/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post_26.html

http://rprajanayahem.blogspot.in/…/not-every-friendship-is-…

May 13, 2017

தமிழக அரசு இலச்சினை


சில விஷயம் பரவலாக ஆழமாக பதிந்து போய் விடும். அது உண்மையல்ல என்பதாகவோ மாற்றுக்கருத்தோ வரும்போது அதை ஏற்றுக்கொள்வது மிகவும் சிரமமாய் இருக்கும்.

ராஜபாளையம் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் பலரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது அவர்கள் கூறிய விஷயமொன்று - தங்கள் கம்பெனி லோகோ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்.
இதைச் சொல்லும்போதே அவர்கள் தமிழக அரசு லோகோவும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தான் என்ற பரவலாக அறியப்பட்ட விஷயத்தையும் சொல்கிறார்கள்.

ராம்கோ லோகோ ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் என்பது இங்கே முக்கியமில்லை. அது அந்த நிறுவண விஷயம்.

ஸ்ரீவில்லிபுத்தூர்காரர்கள் எப்போதும் இது குறித்து பெருமைப்படுவார்கள். ’எங்க கோபுரம் தான் தமிழக அரசு முத்திரையில் இருக்கு!’

தமிழ் நாட்டில் எந்த ஊர்க்காரராக இருந்தாலும் பொது அறிவு விஷயமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் பற்றி இதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன் குமுதத்தில் ”ராசாவின் மனசிலே” தலைப்பில் இளையராஜா ஒரு கேள்விக்கு பதில் சொல்லியிருந்தார்.

எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் இந்த விஷயத்தை ஆணித்தரமாக மறுத்திருந்தார்.
“ தமிழக அரசு இலச்சினையில் தமிழக முத்திரையில் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமே அல்ல. மதுரை மேற்கு கோபுரத்தின் தோற்றம் தான் அது.”


இது குறித்து ஆதாரபூர்வமான உண்மை என்ன? இளையராஜா சொல்வது சரி தானா? இளையராஜா சொல்வதற்கு யாரேனும் பெரிதாய் எதிர்வினையாற்றினார்களா?

We must be more concerned with truths than opinions. Stick to truths.
It is important that such information should be double-checked for authenticity and credibility.
………………………..

http://epaperbeta.timesofindia.com/Article.aspx…


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_9130.html

May 9, 2017

கானல் ’பொய்’கை


1986ம் வருடம். என் அப்பா அழைப்பதாக அவருடைய ஆபிஸில் இருந்து போன் வந்தது. திருச்சி ராஜா காலனி வீட்டில் இருந்து கிளம்பி போனேன். அப்போது சைல்ட் ஜீசஸ் ஆஸ்பிட்டலுக்கு எதிரே இருந்த கஸ்டம்ஸ் ஆபிஸில் அப்பா சூப்ரிண்ட்.


அப்பாவின் கேபினில் நுழைந்தேன்.
அப்பா முன் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்பா “ இவர் யார் தெரியுமா? பாக்யராஜின் அண்ணன் தன்ராஜ்.”
அப்பா காரணத்தோடு தான் என்னை அழைத்திருக்கிறார்.

நான் ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த ‘அழைத்தால் வருவேன்’ படத்தில் உதவி இயக்குனராய் வேலை பார்த்ததை பாக்யராஜின் அண்ணனிடம் சொல்லியிருக்கிறார். ‘என் பையனை உங்க தம்பியிடம் சேர்த்து விடுங்கள்’ என்று சொன்ன பின்பு தான் என்னை ஆஃபிஸிற்கு வரச்சொல்லியிருக்கிறார்.
தன்ராஜ் உடனே “ இவர் தானா உங்கள் மகன் ராஜநாயஹம்! கவலைப்படாதீர்கள். நான் என் தம்பி கிட்ட சொல்லி இவரை அஸிஸ்டண்ட் டைரக்டரா சேத்து விட்டுடுறேன்.”

உடனே தன் தம்பிக்கு என்னை அவருடைய அஸிஸ்டண்டாக சேர்த்துக்கொள்ளச்சொல்லி பிரமாதமான கடிதம் அங்கேயே ஆங்கிலத்தில் எழுதி என்னிடம் கொடுத்தார். Rajanayahem’s father is wellknown to me. He is very helpful to me…….. இப்படி..இப்படி.
”நீங்கள் இந்த கடிதத்தை கொடுங்கள். நான் பத்து நாளில் சென்னை வருவேன். அப்போது நேரடியாகவே நானும் தம்பியிடம் சொல்வேன். இனி உங்களுக்கு நல்ல எதிர்காலம்.”


தன்ராஜ் கோவையில் நடத்தி வந்த வீடியோ கேஸட் கடை மீது அப்போது ஒரு கஸ்டம்ஸ் கேஸ்.


தன்ராஜ் ரொம்ப உற்சாகமாக என்னிடம் பேசினார்.
நான் சென்னை போகவில்லை. பாக்யராஜிடம் சேரவுமில்லை.


அன்றைய மன நிலை. மீண்டும் சினிமாவுக்கு போக வேண்டுமா? Once bitten twice shy. வேண்டாம்.

....................


1992ம் வருடம் மார்ச் மாதம் பள்ளபட்டி பெரிய சேட்டு என்னை ஃபெமினா ஹோட்டலில் ரிஸப்சனிஸ்டாக பார்க்கிறார்.
“ Gabie! It’s a pleasant surprise.”
சென்னை போனவுடன் பெரிய சேட்டு போன் “ எனக்கு உன்னை ரிஸப்சனிஸ்டாக பார்த்தது பிடிக்கவில்லை.”
நான் வேலைக்கு சேர்ந்து அந்த ஐந்தாவது மாதம் ரிஸைன் செய்து விட்டேன்.
அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘ There is always trial and error.’

அந்த கடிதத்தை அவருடைய நண்பர் போலீஸ் டெபுடி கமிஷனர் பாஸ்கர் படித்திருக்கிறார். திரும்ப திரும்ப அந்த கடிதத்தை ரசித்து படித்திருக்கிறார்.

மே மாதம் முதல் வாரம் மீண்டும் பெரிய சேட்டு போன்.
“ நீ உடனே கிளம்பி சென்னை வா. பாக்யராஜ் உன்னை சந்திக்க விரும்புகிறார்.”
டெபுடி கமிஷனருக்கும், பெரிய சேட்டு ஃப்ரூக் இருவருக்குமே பாக்யராஜ் நண்பர். மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும் போது பாக்யராஜ் “ பாக்யா பத்திரிக்கையிலிருந்து சஞ்சீவி விலகி விட்டார். எம்.ஜி.வல்லபனை எடிட்டோரியலில் போட்டிருக்கிறேன். ஒரு நல்ல ஆள் பத்திரிக்கைக்கு தேவை.”
உடனே ஃபரூக் ” என் தம்பியுடைய க்ளாஸ்மேட் ஒருவன் இருக்கிறான். ராஜநாயஹம். இலக்கியமெல்லாம் கரைத்து குடித்தவன்.”
உடனே பாஸ்கர் “யாரை சொல்றீங்க?”
ஃபரூக் “ அந்த ட்ரையல் அண்ட் எர்ரர் கடிதம் எழுதியிருந்தானே!”
“ ஓ அந்த பையனா? பாக்யராஜ்! நானே ரெகமண்ட் செய்கிறேன். அவன் எழுதிய கடிதம் நான் படித்து அசந்து போனேன். அப்படி ஆள் தான் பாக்யாவுக்கு தேவை.”
பாக்யராஜ் “ உடனே ராஜநாயஹத்தை அழைத்து வாருங்கள். பத்திரிக்கை எடிட்டிங் லைனில் சேர்த்துக்கொள்கிறேன்.”

பாக்யா பத்திரிக்கை பார்த்திருக்கிறேன். கணையாழி, நடை, கசடதபற, பிரக்ஞை, ஞானரதம் போன்ற பத்திரிக்கைகளின் வாசகன் நான். பாக்யா பத்திரிக்கையில் சேர்வதா?
முடியாது. மறுத்து விட்டேன். அவரிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக வேண்டுமானால் சேர்கிறேன். பெரிய சேட்டு விடவில்லை. “ வாப்பா நீ மொதல்ல.”

மே 19ம் தேதி சென்னை போய் விட்டேன். பெரிய சேட்டு என்னிடம் சொன்னார் “ பாக்யராஜ் ‘அம்மா வந்தாச்சு’ ஷூட்டிங்குக்காக பாம்பே போயிருக்கிறார். எப்ப வருவாரோ? பொறுமையா இரு. ஒரு வேளை அவரை நீ சந்திக்க ஒரு மாசம் கூட ஆகலாம்.”

மறு நாள் பரபரப்பான திருப்பம். பாக்யராஜ் சென்னை வந்து விட்டார். அது கூட திருப்பம் என்று சொல்ல முடியாது. அன்று மாலை அவர் அண்ணன் தன்ராஜை கோவையில் வீடியோ கேஸில் அரஸ்ட் செய்து விட்ட செய்தி பாக்யராஜுக்கு வந்தது. உடனே சென்னையில் தன் நண்பர் டெபுடி கமிஷனருக்கு போன் போட்டு சொல்கிறார். பாக்யராஜ் ரொம்ப மன உளைச்சலில். காரணம் அரெஸ்ட் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தான் பாக்யராஜின் அண்ணன் என்பதை தனராஜ் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அந்த இன்ஸ்பெக்டர்
 “ நீ எவனா இருந்தா எனக்கென்ன?” என்று சொல்லி விட்டார்.
பாக்யராஜ் புலம்பல் – “ இந்த வீடியோ கடை பிஸினஸ் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன். என் அண்ணன் கேட்கவில்லை. இப்போது இப்படியாகி விட்டதே.”

இங்கிருந்து பாஸ்கர் கோவைக்கு போன் செய்து ஒரு வழியாக தன்ராஜ் லாக் அப்பில் இருந்து வெளிவர நள்ளிரவு தாண்டி விட்டது.
பாஸ்கரும் ஃபரூக்கும் பாக்யராஜை தேற்ற விரும்பியிருக்கிறார்கள். பாஸ்கர் தன் ஆஃபிஸிற்கே வரச்சொல்லியிருக்கிறார்.
நள்ளிரவில் பாக்யராஜ் பாஸ்கரையும் ஃபரூக்கையும் சந்தித்தவுடன் கொஞ்ச நேரத்தில் பாஸ்கரே சொல்லியிருக்கிறார்.“ ராஜநாயஹம் வந்தாச்சு. “
பாக்யராஜ் என்ன சொல்ல முடியும்! ”நாளை காலை பத்து மணிக்கு பாக்யா ஆஃபிஸ்க்கு அழைத்து வாருங்கள்.”

ஃபரூக் பைக்கில் தி. நகர் கிளம்பிப் போனோம். அங்கே உடனே வள்ளுவர் கோட்டத்தையொட்டியிருக்கும் லேக் ஏரியா வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.
“ உங்களை பாக்யா பத்திரிக்கைக்காகத்தான் அழைத்தேன்.”
நான் “ இல்ல சார். நான் மூவி மீடியாவிற்குத் தான் வர விரும்புகிறேன்.”
”நிறைய அஸிஸ்டண்ட்ஸ் இருக்காங்க.”
”பால்ல சக்கரை மாதிரி கரைஞ்சிடுறேன்.”
இரண்டு மணி நேரத்திற்கு மேல் என்னை பரிசோதித்தார்.
பின் அவருடைய பிரபல டயலாக்கில் சொன்னார் – “ சரி. ஜோதியில ஐக்கியமாகிடுங்க”


மீண்டும் 21ம் தேதி மாலை ஐந்து மணி முதல் பதினொரு மணி வரை என்னை பேச விட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.
வேறு யாரையும் அப்போது சந்திக்க மறுத்தார். கவிஞர் வாலி வந்திருப்பதாக தகவல் சொல்லப்பட்ட போது அவரை மறு நாள் சந்திப்பதாக சொல்ல சொன்னார். அப்போது ஆஃபிஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ( பழைய ’முந்தானை முடிச்சு’ அசோசியேட் டைரக்டர் )  இளமுருகு, தன் மனைவி, மாமனாருடன் சந்திக்க முயன்றார். “ம்ஹூம்.” மறுத்து விட்டார்.
பாக்யா ஆஃபிஸில் எல்லோரும் இதை ஆச்சரியத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார்கள். இளமுருகு கமெண்ட்
“ராஜநாயஹத்தை நம்ம டைரக்டர் பம்ப் செட் போட்டு உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்!”

பிறகு பாக்யா ஆஃபிஸில் ஒரு நாள் தன்ராஜை சந்தித்தேன். அவர் கொடுத்த கடிதம் பற்றி ஞாபகப்படுத்தினேன். ஆர்வமாக கேட்டார். ”அப்பா எப்படியிருக்காங்க!”
இப்போது டெபுடி கமிஷனர் பாஸ்கர் மூலமாக பாக்யராஜிடம் சேர்ந்திருக்கிற விஷயத்தை சொன்னேன்.
தன்ராஜ் “ எல்லாத்துக்குமே ஒரு நேரம் வர வேண்டியிருக்குதுல்லங்க!”
அப்போது பாக்யராஜின் கார் ஆஃபீஸில் நுழைந்தது.
பாக்யராஜ் காரில் இருந்து மனைவி பூர்ணிமாவுடன் இறங்கியதும் என்னுடன் நின்ற தன் அண்ணனைப் பார்த்து விட்டு கேட்ட கேள்வி
“ தனம்! நீ எப்ப வந்த?”
ஓ! தன்ராஜ் சென்னை வந்தால் பாக்யராஜ் பங்களாவிற்கு வருவதில்லை போலிருக்கிறது. ஹோட்டலில் தான் தங்குகிறாரா?


ஐந்து மாதம் ’ராசுக்குட்டி’யில் குப்பை கொட்டி விட்டு நான் கிளம்பும்படியானது. சினிமாவில் என்னுடைய இரண்டாவது எண்ட்ரி பிரமாதமான தோல்வி. A successful failure!
ஆறு வருடங்களுக்கு முன் தன்ராஜ் கொடுத்த கடிதத்தை ராசுக்குட்டி தீபாவளி ரிலீஸுக்குப் பின் டிசம்பர் மாதம் ’கடைசியாக’ பாக்யராஜை அவர் வீட்டில் சந்தித்த போது தான் கொடுத்தேன். படித்துப் பார்த்து விட்டு சிந்தனையில் சில நிமிடம் கழித்த பின் திருவாய் மலர்ந்தார் “ அது தான் வந்துட்டிங்களே!”
திரும்ப பாக்யராஜை சந்தித்ததேயில்லை.

........................

2006ல் திருப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது மதியம் சாப்பிட்டு விட்டு ஆஃபிஸ் திரும்பும்போது ராக்கியாபாளையம் பிரிவில் பாக்யராஜ் வேனில் நின்றவாறு மைக் பிடித்து பேசிக்கொண்டிருந்தார். தி.மு.க தேர்தல் பிரச்சாரம். திருப்பூர் மாநகராட்சி தேர்தல்! பிரச்சார வேனை சுற்றி சின்ன கும்பல்.ஒரு பத்து பேர் தான்.
நான் ஸ்கூட்டரில் சென்றவாறே மிக அருகில் அவரைப் பார்த்துக்கொண்டே சினி பார்க் ரோட்டில் திரும்பினேன். அந்த ரோட்டில் ஸ்கூட்டர் திரும்புவதற்கு பாக்யராஜ் வேனையொட்டித்தான் செல்ல வேண்டியிருந்தது.


........................................

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_29.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_6.html

http://rprajanayahem.blogspot.in/2014/10/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html

 http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…


http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_16.html 

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_03.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_05.html

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2012/11/never-explain.html
May 1, 2017

சித்ரகுப்தன்
கருணாநிதியின் ஏட்டை சித்திரகுப்தன் தொலைத்துவிட்டான்.
திமுக தொண்டர்களை சந்திக்க இருக்கிறார் தலைவர்!?

எம தர்ம தர்பாரில் கணக்கு முடிக்கிற சித்ரகுப்தன். இவன் தான் மனித ஜென்மங்களின் ஏட்டை வைத்துக்கொண்டு ஆராய்ந்து ஆயுள் கணக்கை முடிக்கிறவன்.எனக்குத் தெரிஞ்சி ரெண்டு முருக பக்தர்கள். ரெண்டு பேருமே திருச்செந்தூர் முருக தரிசனம் மாதா மாதம் செய்பவர்கள். ரெண்டு பேருமே பரம எதிரிகள்! ’இவன் விளங்காத பய’ என்று அவனும் 
“ வீணாப்போனவன் ” என்று இவனும் ஒருவரையொருவர் பரஸ்பரம் தூற்றிக்கொள்பவர்கள்!

ஒவ்வொரு தடவையும் ஒரு புது பொம்பளையோடு தான் திருச்செந்தூர் போவார்கள். முதல் நாளே போய் ரூம் போட்டு தங்குவார்கள். ‘தெங்கு’வார்கள்! மறுநாள் காலை சன்னதியில் நின்று முருகா முருகா என்று உருகுவார்கள். பக்கத்தில் நிற்கிற புது பொம்பளையும் கண்மூடி பக்தி வெள்ளத்தில் மிதப்பாள். ஒரு தடவயாவது முருகக்கடவுள் “ ஏம்ப்பா… இப்படி கோவிலுக்கு என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் புதுசு புதுசா தள்ளிக்கிட்டு வர்ரீங்களேடா.. இது நல்லாவா இருக்கு..” என்று கேட்க மாட்டாரா?

இந்த ரெண்டு பேர்ல ஒருத்தனுக்கு  சித்ரகுப்தன் மேல பயங்கரமான obsession. தினமும் திரும்பத் திரும்ப சித்ரகுப்தன பத்தியே பேசிட்டே இருப்பான்.

சிலருக்கு தாங்கொண்ணா துயரம், இழிவு, சிறுமை கண்டு புழுவாய்த் துடிப்பார்கள். ஏன்?

’ஏன்னா அவிங்க ஏட்டை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருக்கிறான் சித்திர குப்தன். வச்ச கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஆயுள் பங்கம் இல்லைன்னாலும் 30 வயதிலிருந்து, 40 வயதிலோ, 50 வயதிலோ எல்லா வயதிலும், எந்த வயதிலோ நொம்பலப்பட்டுக்கொண்டு இருக்கிறாங்கென்னா இவனுங்க ஏட்டை கையில் எடுத்து உத்துப் பாக்கிறான்னு அர்த்தம். சித்திரவதை தாங்க முடியாது.

யாரெல்லாம் நல்லா இருக்கானோ அவன் ஏடு சித்திர குப்தன் கையில சிக்கலன்னு அர்த்தம். அதெ போல ஒருத்தன் சாவு தள்ளிப்போனால் சித்ரகுப்தன் அவன் ஏட்டை நிச்சயமா தொலைச்சிட்டான்.’

இந்த ஃப்ராடுக்கு நகைக்கடை வியாபாரத்தில் தன் யுக்தி பலிக்கவில்லை என்றால்
புலம்பல் இப்படித்தான் ‘ சித்ரகுப்தன் என் ஏட்டை கையில எடுத்துட்டான். நிம்மதியே இல்ல. எனக்கு வாச்சவ சரியில்ல. எங்கப்பன உதைக்கப் போறென்.’ 

சரியான சாமியார் பைத்தியம். சாமியார்களை தேடி அலைவான். சித்தர், புதையல் ஏக்கம் தான்.
இந்த சித்ரகுப்தன் கதை கூட எவனாவது சாமியார் தான் இவன் கிட்ட சொல்லியிருப்பான். 

அப்போது நான் தந்த பெருந்தொகைக்கு பல மாதங்களாக இந்த நகைகடை முதலாளி வட்டி தரவே இல்லை. முதலும் திரும்பி வரவில்லை.

கேட்கப்போன என்னிடம் இவன் சொன்ன பதில்
" மைனர் வாங்க உட்காருங்க. ஐயோ மைனர்...  
காபி, கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டேனு பிடிவாதமா இருக்கீங்களே.  
திருச்சி வயலூர் முருகனை போய் கும்பிட்டேன். அப்பிடியே சமயபுரம் ஆத்தாளுக்கும் ஒரு அர்ச்சனை பண்ணிட்டேன். கேரளாவிலே ஒரு விஷேசமான கோவில்னு சொன்னாங்க. அங்கேயும் போய் என்ன எழவு செய்யனுமோ செஞ்சிட்டு வந்துட்டேன் பாத்துக்கங்க. ஐயோ மைனர்! திருச்செந்தூர் முருகனுக்கு என் முடி, என் பிள்ளைகள் முடி எல்லாத்தையும் காணிக்கையா கொடுத்துட்டேன் போங்க...
முந்தா நாள் தின தந்தியிலே ஒரு விளம்பரம்.ஒரு தாயத்து..ரொம்ப விஷேசமான தாயத்தாம். அதை கையில வச்சிகிட்டா அஷ்ட லக்ஷ்மியும் கிடைக்குமாம். அதற்கும் மணி ஆர்டர் நூறு ரூபா அனுப்பிட்டேன். நான் என்ன செய்யட்டும் நீங்களே சொல்லுங்க. 
சித்திரகுப்தன் என் ஏட்ட கையில எடுத்துட்டான். என் ஏட்டத்தான உத்துப்பாக்கிறான்."

ரோட்டில இவனுக்குப் பிடிக்காத ஒரு வசதியான பெரிய மனிதர் அப்போது போனார். உடனே அசூயையுடன் கத்தினான் “ இவன் ஏட்ட சித்ரகுப்தன் கையில எடுக்க மாட்டேன்றானே. இவன்  ஏட்ட தொலச்சிட்டான்னு நெனக்கிறேன்.”Apr 28, 2017

பெண்மை வாழ்கவென்று


‘சம்சாரக் கடலில் மூழ்கியுள்ள ஆண் தன் திருமண வாழ்க்கை பற்றி பெருமிதமாக “successful married life” என்று தான் சொல்வான். பெண் அல்லவோ சொல்ல வேண்டும் இந்த வார்த்தையை.
ஆணுக்கு மனைவி அமையத்தான் செய்கிறாள். பெண்ணுக்குத்தான் கணவன் அமைவதில்லை’
- இன்று கூத்துப்பட்டறை மாணவி மகேஸ்வரி மீனாட்சி இப்படி சொன்னார். 


ஆஸ்கார் ஒயில்ட் இதை ஒட்டியே தான் சொன்னான்.
” There is nothing in the world like the devotion of a married woman. It is a thing no married man knows any thing about.”

பிரஞ்சு கவிஞன் பால்சாக்: “ In a husband there is only a man. In a married woman, there is a man, a father, mother and a woman.”

மெஸோக் : அனைத்து நாகரீக மறுமலர்ச்சி யையும் தாண்டி இயற்கையால் படைக்கப்பட்ட முந்தைய நிலை மாறாமல் கலப்படமின்றி அப்படியே தான் இருக்கிறாள் பெண் . Woman is faithful as long as she loves, but you demand that she be faithful without love and give herself without enjoyment. Who is cruel then, woman or man?
........


அம்மாபேட்டை கணேசன் : ‘அடுக்குல இருக்கறது அரிசியோ, ஆரியமோ உள்ளத கொண்டு பக்குவமா சாதங்கறி வெச்சி பசியாத்தறாங்களே பொண்டுங்க, அவிங்களுக்கு தெரியாத வித்தையா?!’

A man is a man until he can, but a woman is a woman till she dies.


 ( ராஜா ரவி வர்மா ஓவியம். இரவில் தமயந்தியை காட்டில் கை விட்டு நழுவும் நளன். )

.........................

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_7763.html

http://rprajanayahem.blogspot.in/2017/01/blog-post_8.html

http://rprajanayahem.blogspot.in/2012/05/mrs-dalloway.html

 

 

Apr 27, 2017

முத்துப்பேட்டை சோமு


நாகப்பட்டினத்தில் என் தந்தை, பெரியப்பா இருவருமே கஸ்டம்ஸ் அதிகாரிகளாக வெவ்வேறு காலகட்டங்களில் இருந்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டராய் இருந்த போதும் சூப்ரிண்ட் ஆக இருந்த போதும் நாகை கஸ்டம்ஸில் இருந்தவர்கள்.

இன்ஸ்பெக்டராக இவர்கள் இருந்த காலத்தில் எஸ்.எஸ்.ரஜூலா கப்பல், சூப்ரண்ட் ஆக இருக்கும்போது எம்.வி.சிதம்பரம் கப்பல்.

கப்பல் நாகை துறைமுகம் வரும்போது பேக்கேஜ்காக திருச்சியில் இருந்து கூட சுங்கத்துறை அதிகாரிகள் வருவார்கள்.

முத்துப்பேட்டை சோமு என்பவர் எங்கள் வீட்டுக்கு வருவார். என் பெரியப்பா நாகையில் இருக்கும்போது அவர் வீட்டுக்கும் வருவார்.
வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி.

என் அப்பா, பெரியப்பா இருவருக்குமே நல்ல நட்பில் இருந்தார்.
அவருடைய மகள் ஹேமாமாலினி அந்தக்காலங்களில் பாரதிராஜா படங்களில் கதா நாயகிக்கு டப்பிங் பேசிக்கொண்டிருக்கிற விஷயத்தை எங்களிடம் சொல்வார். என் பெரியப்பா “ எங்க தொரய சினிமாவில சேர்த்து விடுங்க” என்பார். தொரை என்பது என்னைத்தான்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் அப்பா, பெரியப்பா இருவரும் கஸ்டம்ஸ் யூனிஃபார்மில் இருக்கும்போது ஒரு நாள் முத்துப்பேட்டை சோமு “ அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் தனித் தனியா பார்த்தால் பயப்பட மாட்டேன். ஆனா ரெண்டு பேரும் சேர்ந்திருக்கும் போது பாக்க பயமா இருக்கு. அதனால வால சுருட்டிக்கிட்டு இருக்கேன்.”
வேடிக்கையாக இப்படி என் அப்பா, பெரியப்பா இருவரிடமும் பேசுவார்.

அவர் மகன் இப்போது பெயர் சொல்லும் நடிகர்.
எம்.எஸ்.பாஸ்கர்.

இன்று அவருடைய பேட்டி ஆனந்த விகடனில் பார்த்தேன்.

அவருக்கு ஒரு போன் செய்து இந்த பழைய விஷயங்களை சொன்னேன். எம்.எஸ்.பாஸ்கர் கேட்டுக்கொண்டார். அவரோடு அறிமுகமோ பரிச்சயமோ எதுவும் கிடையாது.
……………………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2017/02/blog-post_7.html

http://rprajanayahem.blogspot.in/2012/06/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/2016/12/blog-post_2.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_6071.html

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html


Apr 22, 2017

சுப்புடு தட்டிப்பாத்த கொட்டாங்குச்சி


சுப்புடுக்கு நூற்றாண்டு?

தன் 80வது வயதில் சொன்னார். “ இன்னும் ஒரு நாற்பது வருடங்கள் தான் நான் உயிரோடு இருப்பேன்.”
90 வயதில் இறந்தார்.சுப்புடுவின் கறாரான சங்கீத விமர்சனங்கள். அவருடைய ஹ்யூமர்.
பாலமுரளி, வீணை பாலச்சந்தர் ஆகியோரையெல்லாம் கிண்டி கிழங்கு எடுத்தவர்.


வித்வான்களிடம் சுப்புடுவின் கடுமையான கண்டிப்பான வார்த்தைகள்.

 "ரொம்ப சபாக்களில் காரியதரிசிகள் அரங்குக்கு வெளியே தான் நிற்பார்கள் . 'உள்ளே நடக்கும் அக்கிரமங்களுக்கு நான் பொறுப்பு இல்லை' என்பது போல."
” வயலின் கன்யாகுமரி இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்குகிற பேர்வழி. விட்டால் கதரி கோபால் நாத்தின் மடியிலேயே உட்கார்ந்து விடுவார்.”
 சங்கீத பாடகர்கள் சினிமாவில் பாடக்கூடாது என்பது பற்றி நிறைய எழுதியவர். 1940களில் இருந்த சினிமாப்பாடல் கர்நாடக சங்கீதத்தோடு ஒன்றியது. அதைக்காரணம் காட்டி சுப்புலட்சுமி சினிமாவில் பாடவில்லையா? ஜி.என்.பி பாடவில்லையா? என்று சப்பை கட்டு கட்டி, 1990களில் கூட சினிமா பாட்டு பாடலாமா? என்று கறாராக கேட்டார்.சினிமா பாடல்கள் பாடிவிட்டு சங்கீதமும் பாடமுடியாது என்பது சுப்புடு சித்தாந்தம்.சினிமாவில் பாடுவதை கொடிய வியாதியாக சித்தரித்தார்.

ஆனால் உறுத்தும் ஒரு விஷயம். 1983ல் திடீரென்று டி.ராஜேந்தர் பாடிய சினிமாப்பாடல் ஒன்று பற்றி புல்லரித்தார். செடியரித்து மரம் அரித்துப்போனார். தும்பிக்கய ஊனி, நாலு காலையும் தூக்கி, சங்கு சக்கரமா சுத்தி, ’பேஷ், பலே’ என்று ’ஆஹா’காரம் செய்தார்.


இத்தனைக்கும் 1980களில் தரமான எத்தனையோ இளையராஜா பாடல்கள் நூற்றுக்கணக்கில் இருந்தன.
1960களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி.மஹாதேவன் பாடல்கள்? சௌந்தர்ராஜன்,சுசிலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்கள்?

ஆனால் சுப்புடு நெகிழ்ந்து போன அந்தப்பாடல் எது தெரியுமா? டி.ராஜேந்தர் இசையமைத்துப்பாடிய
”தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி, தாளம் வந்தது பாட்டவச்சி. “
தங்கைக்கோர் கீதம் படத்தில் இந்தப் பாடலை கேட்டு விட்டு கண்ணீர் விட்டு அழுததாக சுப்புடு சொன்ன அபத்தம் இங்கு நடந்திருக்கிறது.
அதற்குப் பிறகும் கடைசி வரை கர்னாடக சங்கீத பாடகர்கள் சினிமாவில் பாடிய போது முகம் சுளித்துக்கொண்டே தான் இருந்தார்.

Once in a while, A consistency comes forward that is both sublime and foolish!
........................................
http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_27.html

http://rprajanayahem.blogspot.in/2016/05/blog-post_26.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_27.html

http://rprajanayahem.blogspot.in/2016/07/vv.html

http://rprajanayahem.blogspot.in/2015/03/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_12.html