Share

Jun 6, 2016

மலையாளிகளின் சினிமா ரசனை


- 

ஈகா தியேட்டருக்கு பின்னால் இருக்கிற புரொஃபசர் சுப்ரமண்யம் தெருவிலிருந்த எம்.இ.எஸ் ஹாஸ்டலில் மலையாளிகள் அதிகம். மலையாளி எஜுகேஷனல் சொசைட்டி ஹாஸ்டல்! தமிழர்களும் கொஞ்சம் உண்டு. என்னைத் தவிர எல்லோரும் நல்ல வேலையில் இருந்தவர்கள். டாக்டர், எஞ்ஜினியர், வக்கீல்கள். நான் சினிமாவில் அஸிஸ்டண்ட் டைரக்டர் என்றாலும் எல்லோருமே என்னை ’டைரக்டர்’ என்றே விளிப்பார்கள்.
கமல் ரஜினி காலம். எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக முதல்வர் ஆக கொடி கட்டியிருந்தார். எம்.இ.எஸ்.ஹாஸ்டலுக்கு பிரேம் நஸீர் வந்து எங்களோடு விருந்தில் கலந்து கொண்டது உண்டு.


பிரேம் நஸீர் ஐநூறு படங்களில்  நடித்த கதாநாயக நடிகர். ஷீலாவும் நஸீரும் நூற்றியைம்பது மலையாளப் படங்களில் ஜோடியாக நடித்து சாதனை புரிந்தவர்கள்.

 மலையாள நண்பர்கள் என்னிடம் எப்போதும் கேட்பார்கள்
“ டைரக்டர்! தமிழர்கள் ஏன் இப்படி எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி என்று வெறி பிடித்த ரசிகர்களாக அலைகிறார்கள்?”

சினிமா நடிகர்களை சினிமா நடிகர்களாக மட்டுமே பாவிப்பவர்கள் மலையாளிகள் என்று 1960,1970களிலிருந்தே இங்கே தமிழர்கள் அனைவரும் அறிந்திருந்த விஷயம்.

தெலுங்கில் என்.டி.ராமாராவ், கன்னடத்தில் ராஜ்குமார் தெய்வங்களுக்கு மேல் உயர்ந்தவர்களாக கொண்டாடப்பட்ட போதும் இங்கே எம்.ஜி.ஆர், சிவாஜி என்று தமிழர்கள்
obsession ல் சிக்கிக்கொண்டிருந்த போதும் மலையாளிகள் 
 சத்யன், பிரேம் நஸீர், மது ஆகிய நடிகர்கள் மீது இப்படிப்பட்ட பரவசம் இல்லாமல், தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடாமல், ஆரோக்கியமான மன நிலையில் தான் இருந்தார்கள். மலையாளிகள் படித்தவர்கள்.

அங்கே இன்றும் கூட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அரசியல் தானே!

மலையாளிகளுக்கு இங்கே ஒரு மலையாளியை சினிமா ’வசூல் சக்ரவர்த்தி’யாக்கியதும், அதையும் தாண்டி அரசியலில் பெருந்தலைவனாக உச்சத்தில் வைத்ததும் குறித்து கொஞ்சம் பெருமிதம் இருந்தாலும் எம்.ஜி.ஆர் நடிப்பு பற்றி, அரசியல் பற்றி பிரமை, திருப்தியெல்லாம் அன்று கிடையாது.

இப்போது கேரளத்தில் ஏதாவது மாறுதல் வந்திருக்கிறதோ?

“புதிய நியமம்” படம் பார்த்தால் எழுத்தில் “thanks to Mammooty fans association, thanks to Nayanthara fans association” என்று குறிப்பிடுகிறார்கள்!

 “Run baby run” படத்தில் “Thanks to Mohanlal fans association” என்று இருக்கிறது.

 “Charlie” படத்தில் மம்முட்டி மகன் துல்ஹர் சல்மான் ரசிகர் மன்றத்துக்கு நன்றி சொல்கிறார்கள்! 

’ஒரு வடக்கான் செல்ஃபி’யில் நிவின் பாலி ரசிகர்களுக்கு நன்றி! ‘Memories’ படத்தில் பிரித்வி ரசிகர்களுக்கு நன்றி.
ஓஹோ அப்படியா! God’s Paradise தமிழகம் போல சினிமாப்பைத்தியங்கள்  நிறைந்த பூமியாக மாறிக்கொண்டிருக்கிறதா?!

இந்தியாவில் எந்த சுகமும் காணாமல் கட்சித்தொண்டர்கள், சினிமா நடிகர்களின் ரசிகர்கள் என்று இருப்பது போல வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு lunatic fanatism உண்டா!





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.