Share

Jun 22, 2016

நடேஷிடம் ராஜநாயஹம் நடத்திய நேர்காணல் - 3

"எல்லாவற்றையுமே அழகியலாகவே பார்த்துவிட முடியுமா என்ன?" - ஓவியர்.மு.நடேஷ் பேட்டி

ஞாயிறு, 19 ஜுன் 2016

ராஜநாயஹம் : கருத்தை பயன்படுத்தி அரூபமான ஓவியம் (Conceptual Abstraction) வரைவது மற்றும் ஓவியத்தில் உருக்குலைவு (deformity) பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.


நடேஷ்: உருக்குலைவு என்றால் அதிலும் கதைதான் வருகிறது. ஏன் உருக்குலைக்கிறோம் என்றால் சரியான உருவத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லமுடியாத போதுதான். உதாரணமாக, சல்வடோர் டாலியின் ஓவியங்களைப் பார்த்தீர்கள் என்றால் முழுக்க கனவுத்தன்மையான ஓவியங்களாக இருக்கும். கனவில், என்னுடைய கை நீண்டு அந்தக் கோடியில் இருக்கும் ஒரு ஆளைப் பிடித்து தூக்கிவர முடியும். அது கனவில்தான் நடக்கும். டாலி ஒரு கடிகாரத்தை தூக்கி, அதை ஒரு கோட்ஸ்டாண்டில் வைத்து, அதை உருக விட்டதைப்போல, போரைப் பற்றிய பிகாசோவின் பயங்கரமான ஓவியமான குவர்னிகாவைப்போல, அதை அவர் ஜாலியாகத்தான் செய்திருக்கார். அதில் எல்லாவற்றையுமே உருக்குலைத்துப்போட்டிருக்கிறார். போர் புகைப்படங்களை எடுத்துப் பார்த்தால் அதில் எல்லாம் உருக்குலைந்துதான் இருக்கும். அதை சீரமைப்பதுதான் வேலையாக இருக்கும். அதேமாதிரி குவர்னிகா ஓவியத்திலும் போரின் உருக்குலைவை அதில் பிகாசோ செய்து வைத்திருக்கிறார். எல்லாவற்றையுமே அழகியலாகவே பார்த்துவிட முடியுமா என்ன? அப்படிப் பார்ப்பது வேறுமாதிரியான அழகியல்.

ராஜநாயஹம்: இன்ஸ்டாலேஷன் ஆர்ட் பற்றி?

நடேஷ்: நிர்மாணக் கலை என்று அதற்குப் பெயர். ஒரு நாடகத்துக்கோ ஒரு சினிமாவுக்கோ செட் போட்டால் செட்டைக் கலைத்துவிடுகிறோம். அதேபோல், ஒரு இடத்தில் ஒரு மாதத்துக்கான வடிவத்தை நிர்மாணம் செய்து கழட்டி மாட்டுகிறோம். அது கொஞ்சநாள் இருக்கும். அப்போது நீங்கள் பார்க்கலாம். அதற்குள் ஒரு கருத்து இருக்கும். தூக்கி எறியக்கூடிய, பயன்படாத பொருட்களை வைத்து அதில் கதையை உருவாக்கி நிர்மாணிப்பது. நான் அப்படி 47 அடி உயரத்தில் ஒரு கோபுரம் கட்டி, அதில் கண்ணாடி உட்பட பல பொருட்களைப் பொருத்தி பிறகு, தொட்டி ஒன்றைக்கட்டி அதற்குள் ஒரு படகை மிதக்கவிட்டு, கிட்டத்தட்ட ஒரு 10 வருடம் 20 முதல் 25 வரையிலான நிர்மாணக் கலைகளை நான் பண்ணியிருக்கிறேன். ஆனால், அது நம் கையில் இருக்கும் பணத்தைப் பிடுங்கிவிடும். ஏற்கனவே, ஓவியத்தில் பெரிதாக வருமானம் ஒன்றும் கிடையாது. மேலும், குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு, அதை காட்டவும் முடியாது. ஒருவேளை நல்ல புகைப்படங்கள் இருந்தால் வேண்டுமானால் அதைக் காட்டலாம்.

ராஜநாயஹம்: இருமை எதிர்வுகளை ஒன்றாகப் பார்ப்பதற்கான பக்குவம் வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுதான் ஞானம் என்றும், அப்படி இல்லாமல் இயற்கையை விட்டுவிட்டு கலாச்சாரத்தில் மனிதன் இறங்கும்போதுதான் தகராறு, முரண்பாடு எல்லாம் ஏற்படுகிறது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். என்னளவில் இந்தச்
சிந்தனை பெரும் பாய்ச்சலானது. அதுபற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?

நடேஷ்: ஆனால், அதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. அதை தெரிந்து வைத்துக் கொள்ளலாமே தவிர, அது உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்குமே தவிர, அதை வைத்துக்கொண்டு நீங்க போர்தான் புரியலாம். தப்பானதை சரி என்றுசொல்லி எல்லாரையும் கொள்ளையடிப்பதை என்ன சொல்லமுடியும்? தெருவில் இறங்கி கூச்சல்போட முடியும். அதிகமாகப் போனால் கல்லெடுத்து அடிக்க முடியும். கூட்டமாகச் சேர்ந்து ஏற்கனவே இருப்பவனை கீழே இறக்கிவிட்டு நீங்க மேலே ஏறி உட்கார்ந்துகொள்ள முடியும். நான் சின்ன வயதில் இப்படிச் சொல்லியிருந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனை கத்தியெடுத்து குத்துகிறேன். எல்லாவற்றையும் சரி பண்ணிடுவேன். மாவோயிஸ்ட்டாக ஆயிடுவேன். நக்சலைட்டா ஆகிடுவேன்னு சொல்லி, அப்படித்தான் ஆகியிருப்பேன். உலகம் இருமையில்தான் இருக்கிறது என்பது புரிகிறது. உலகம் இருமையில் சுழல்கிறது என்பதை ஞானம் சம்மந்தமான புரிதலாக வைத்திருக்கலாமே தவிர, அதை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. ஜனநாயகத்தில் நல்ல விஷயம் என்னவென்றால், என்னை பிடிக்கவில்லையென்றால் மோடி என்னை கத்தியால் குத்த முடியாது. தூக்கி ஜெயிலில் போட்டுவிடுவார்கள். மானை பசிக்கு புலி சாப்பிடுகிறது. எவ்வளவு மான் இருக்கிறது, எவ்வளவு புலி இருக்கிறது? லட்சக்கணக்கில் மான் இருக்கிறது. ஆனால், புலியோ முப்பது நாற்பதுதான் இருக்கிறது. நிறைய புலி இருந்தபோதுகூட மானின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததுதான். அதை விடுங்க. கோடிக்கணக்கில் கொசு இருக்கிறது. அதை என்ன செய்யமுடியும். உயிரை முழுதாகப் பிடிப்பது கொஞ்சமாகத்தான் இருக்கிறது. உயிரைச் சாப்பிடும் உயிர்தான் அதிகமாக இருக்கிறது. உயிர்னா கத்தரிக்கா, வெண்டைக்காய், வெங்காயத்துக்கெல்லாம் உயிர் இல்லையா? இருக்கு. ஒரு உயிர் இன்னொரு உயிரை உண்டுதான் உயிர் வாழ்கிறது. சரி, தப்பு என்பதில்தான் உலகமே சுற்றிச்சுற்றி வருகிறது. அதை எதுவும் செய்ய முடியாது.

ராஜநாயஹம்: நீங்கள் உபயோகிக்கும் வண்ணங்கள் (பச்சை, நீலம்) குறித்து எம்.டி.முத்துக்குமாரசாமி ஒரு குழந்தை தன்னை யாருமே கவனிக்கவில்லை என்ற ஏக்கம்தான் உங்கள் ஓவியத்தில் வெளிப்படுகிறது என்கிறாரே?

நடேஷ்: அது அவருடைய பார்வை. தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு கலர் இங்கிலாந்தில் இல்லை. இங்கிலாந்தில் உள்ள கலர் தமிழ்நாட்டில் இல்லை.ஆனால், டியூபில் அந்தக் கலர் கிடைக்கிறது. ultra marine blue என்று ஒரு கலர் இருக்கு. அதை நீங்கள் தமிழ்நாட்டில் பார்க்கவோ, பயன்படுத்தவோ முடியாது. வருடத்தில் 8 மாதம் வெயிலாக இருக்கும் ஒரு ஊரில் நான் வாழ்கிறேன். நான் பார்ப்பதைத்தான் என்னால் வரைய முடியும். அப்படி அழகாக இருக்கிறது என்பதற்காக, ஒரு வண்ணத்தை வைக்கிறேன் என்றால் அதை வைக்கக்கூடாது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் போய்ச் சேராது. பச்சையாக ஒரு வண்ணத்தை வைத்து பக்கத்தில் பிங்க், சிவப்பு போன்ற வண்ணங்களை வைக்க முடியுமா? ஆனால், ஊட்டியில் மலர்கள் அந்த வண்ணத்தில்தான் இருக்கிறது. வெளிநாடுகளில் வருடத்தில் பாதி பனிபடர்ந்து வெள்ளையாகத்தான் இருக்கும். ஆகாசம்கூட வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். என்ன நிறத்தைப் பார்க்கிறோமோ அதுதான் ஓவியத்தில் இருக்கும்.

ராஜநாயஹம்: பச்சை வண்ணம்?

நடேஷ்: பச்சை வண்ணத்தை பாதிப்பேர் பயன்படுத்தவே மாட்டார்கள். பச்சைவண்ணம் பக்கமே பலர் போகமாட்டார்கள். காரணம், பச்சையை வைத்தால் பக்கத்தில் எந்தக் கலரை வைத்தாலும் கண்ணில் டமால் டமால் என்று அடிக்கும். தெருவில் போகும்போது கண்ணைத் திறந்து பார்க்கிறாயா? எவ்ளோ பிரமாதமா பச்சைபசேல்னு இருக்கிறது. என் நிலப்பரப்பு பசுமையா இருக்கு, 2 நாள் மழை பெய்ஞ்சாகூட பசுமையா ஆகிடுது. சுற்றிலும் இவ்ளோ பச்சையை வைத்துக்கொண்டு நான் ஓவியத்தில் பச்சையைக் கொண்டுவந்தால் மட்டும் ஏன் தப்பு சொல்கிறார்கள். அதை எல்லாம் வெட்டிப் போட்டுவிட்டு பாலைவனமாகவா மாற்ற முடியும். இல்லை பிரௌன் கலர் நன்றாக இருக்கிறது என்பதற்காக அதை வைக்கமுடியுமா? லைட்டான கலராக வெள்ளையா இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதற்காக பனியையா கொண்டுவந்து கொட்ட முடியும். வெறும் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே வரைய முடியும். முப்பட்டக்கல்லில் பிரிக்கிறார்களே, அதில் சிவப்பு அலைக்கற்றையை மட்டும் எடுத்துக்கொண்டால் இந்தப் பக்கம் ஊதாவில் இருந்து அந்தப் பக்கம் ஆரஞ்சு வரை ஒரு பெரிய அலைக்கற்றை இருக்கிறது. வாழ்நாள் முழுக்க வெறும் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே வரைய முடியும். நமக்கு பிடித்திருப்பதால்தான் எல்லா வண்ணங்களையும் பயன்படுத்துகிறோம்.
ராஜநாயஹம்: ஒரே ராகத்தை மூன்று நாள் பாடுவது மாதிரியா?
நடேஷ்: சரியாகச் சொன்னீங்க. காவேரிக்கரையில் மிகப் பெரும் இசை விரும்பியான ஜி.கே.மூப்பனார், உமையாள்புரம் சிவராமன் இருக்கிறார் அல்லவா! அவரை இரவு 12 மணிக்கு தொடங்கச் சொல்கிறார் என்றால் காலை 6 மணி வரை ஒரே ராகமாக போய்க்கொண்டிருக்கும். ஒரு வடிவத்தில் இருக்கக்கூடிய ஒரு சப்தம்தானே ராகம், இன்னொரு வடிவத்தில் இருக்கக்கூடிய இன்னொரு சப்தம் வேற ராகம். வண்ணம் மாதிரிதான் ராகம். அது கண்ணால் பார்ப்பது இது காதால் கேட்பது.
ராஜநாயஹம்: என் ஓவியத்துக்குள் பேரின்பம் பொழிய கடைந்தெடுத்த வெறுப்பு, நீலகண்ட விஷம் போன்றதையும் அனுபவித்தே ஆக வேண்டும் என்ற உங்கள் கூற்று இருக்கிறதே அது முக்தியா, விரக்தியா?
நடேஷ்: பாற்கடலைக் கடையும்போது அமுதமும் வந்தது. ஆலகால விஷமும் வந்தது. சிவபெருமான் கழுத்தை அவர் மனைவி பார்வதி பிடித்த கதை நமக்குத் தெரியும். இரண்டுமே இருக்கிறது. என்னுடைய ஓவியத்தைப் பார்த்து உங்களுக்கு பேரானந்தமும் வரவேண்டுமென்றால் கடுமையான துக்கமும் விஷத்தன்மையும் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதை நான் அனுபவித்தே இருக்கவேண்டும். அதுதானே வாழ்க்கைக்கு தூக்கிக் கொண்டுபோய் விடும்.
அண்மையில், என் நண்பர் கேசி இறந்துபோனார். (கேசி ஒரு மலையாளி. சமிக்ஷா எம்.கோவிந்தன் என்ற பிரபல மலையாள எழுத்தாளரின் மகன். கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். கூத்துப்பட்டறை ஆரம்பிப்பதற்கு முன்பே ந.முத்துசாமி சாரின் ‘நாற்காலிக்காரர்’ நாடகத்தை 1975ம் ஆண்டிலேயே
மேடையேற்றியவர். கூத்துப்பட்டறையின் பிரதான குருமார்களில் ஒருவர். பரம்பரையாக கூத்துக் கலையில் ஈடுபட்டுவரும் கண்ணப்ப தம்பிரானின் மகன்களுக்கு பயிற்சி கொடுத்தவர். இட்டு நிரப்பமுடியாத இடம் அவருடையது.) படு பயங்கரமான சோகம் அது. அந்தச் சோகம் என்னை அழத்தான் வைக்கும். உலகத்துக்கே தெரியாத ஆளு. அவனைப்பற்றி ஃபேஸ்புக்கில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டும். அப்போது பேரின்பம், கடும் துயரம் இரண்டுமே அனுபவம்தான். சில சமயம் அதை தேடியே நீங்கள் போவீர்கள்.
1983 காலகட்டத்தில் பெல்லியப்பா என்று ஒரு நண்பர். உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பில்லை கட்டாமல் வேண்டுமென்றே போலீஸ்காரர்கூட போய், ஜெயிலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துவிட்டு வருவார். பணக்கார வீட்டுப் பிள்ளை இப்படி ஒரு அட்டகாசம் செய்யும். அதுவும் ஒரு இருமைதான். கோடிக்கணக்கில் பணம் இருந்தால் போன விமானத்திலேயே அமெரிக்காவிலிருந்து திரும்பி வரலாம். நல்ல அற்புதமான ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடலாம். அளவுக்குமீறி பணம் இருந்தாலும் அதை உட்கொள்ள முடியாது. அதைத்தானே பழமொழியில் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்று சொன்னார்கள். எல்லாம் அனுபவத்தில் சொல்லப்பட்டுவிட்டது. அடுத்த குழந்தை அதை திரும்பவும் தொட்டு அனுபவிக்கும். அனுபவித்துவிட்டு செத்துப் போய்விடும் அவ்வளவுதான். நன்றி.


................................................................................................................


.....................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.