Share

Nov 9, 2015

ஆச்சி... ஆர்ப்பரித்த அருவி










திரையுலகில் 57ஆண்டுகள் இயங்கிய தேர்ந்த நடிகை. ஆர்ப்பரித்த அருவி ஓய்ந்துவிட்டது என்று எப்படி சொல்ல முடியும்?
’கண் திறந்தது’ படத்து கதாநாயகன் எஸ்.எம். ராமநாதன் தான் மனோரமாவின் கணவர். பூபதியின் தகப்பனார். மிகையான நடிப்பியல்பு கொண்ட நடிகர். கண்ணதாசனின் ’கறுப்பு பணம்’ படத்தில் ‘தங்கச்சி சின்னப்பொன்னு தலையென்ன ஆடுது’ சீர்காழி பாடலுக்கு இவர் தான் நடித்தார்.
பிரிந்து விட்ட தம்பதியை சேர்த்து வைக்க சிலர் முயன்ற போது ராமநாதன் சொன்னார்: “ உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டாது..”


’ஆச்சி’ என்பார்கள். ’அக்கா,அக்கா’ என்பார்கள். ஆனால் அவரை நான் அப்போது ’அம்மா’ என்று தான் அழைத்திருக்கிறேன்.
கோபிசெட்டிப்பாளையத்தில் இரவு சாப்பிட்டு விட்டு வாக்கிங் போய் ஹோட்டலுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது, மற்றொரு படத்தில் நடிக்க வந்த மனோரமா காரில் திரும்பிக்கொண்டிருக்கிறார். அந்த இருட்டிலும் என்னை அடையாளம் கண்டு “என்னப்பா! காரில் ஏறிக்கங்க.” என்று அன்போடு சொல்கிறார். இது தான் ஆச்சி!
கமல்ஹாசன் தன் முதல் மகள் ஷ்ருதி பிரசவத்தின் போது “மனோரமாவைக் கூப்பிட்டிருந்தால் சரிகாவிற்கு ஒத்தாசையாக உதவிக்கு நிச்சயம் வந்திருப்பார்” என்று சொன்னது இந்த அன்பின் ஆழம் புரிந்ததனால் தான்.
ஒரு துணை நடிகைக்கு குரல் கொடுக்க வந்த டப்பிங் ஆர்ட்டிஸ்டின் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருப்பார்!
ஆனால் தற்பெருமை, கர்வம், அகந்தை நிறைந்த ‘EGOTIST’ கதாபாத்திரத்தை மனோரமா போல யாராலும் சிறப்பாக செய்ய முடிந்ததேயில்லை.

எம்.ஜி.ஆர் பற்றி “ எங்கண்ணன் குரல் கணீர்னு வெங்கல மணி அடிச்ச மாதிரி இருக்கும். 1950களில் ஒரு தடவை நான் எங்கம்மாவோட வாணி மஹால்ல நுழையிறேன். எங்கண்ணன் பேசிக்கிட்டிருந்தாரு. வெங்கல மணி அடிச்ச மாதிரி கணீர் கணீர்னு! பின்னால அப்புறம் குண்டடி பட்டு ‘காவல்காரன்’ படத்தில அவரு “பாழ்த்தேன் சுசிலா, பால்த்தேன்”ன்னு பேசினத கேட்டப்ப அப்படி அழுதேன்யா அப்படி அழுதேன்.” தழுதழுத்து சொன்னார் என்னிடம்.

மனோரமா ஆயிரம் படத்தில் நடித்தவர் என்று சொல்கிறீர்கள். ஏதேனும் ஒரு படத்தில் அவர் பேசிய டயலாக்கின் ஓரிரு வரிகளைச் சொன்னால் மீதியை ’டான்’ என்று மீதியை சொல்லி விடுவார்! ஒரு தடவை டப்பிங் தியேட்டரில் அப்போதைய சூழ்நிலை ஒன்றிற்கேற்ப நான்  ’அனுபவி ராஜா அனுபவி’யில் அவர் நாகேஷைப்பார்த்து சொல்லும் டயலாக்கான 
“கண்ணு சரியில்ல..மூக்கு சரியில்ல..வாயி சரியில்ல..எதுவுமே சரியில்ல..”ன்னு சொல்லும்போதே மனோரமா “அதனால தான் சொல்றேன். இந்தாளு தான் என் புருஷன்!” என்று முடித்து அந்தக்கால நினைவில் மூழ்கி சிரித்தார்.

அவரிடம் இருந்த FRANKNESS! அவரிடம் RETICENCE என்பதே கிடையாது தெரியுமா! இந்த ஓட்டைவாய்த்தனத்தோடு மனோரமா எப்படி திரையுலகில் தாக்குப்பிடிக்க முடிந்தது. என்னிடம் ஒரு முறை சொன்னார்: ” சிவாஜிக்கு மனுஷ வாடையே ஆகாது. அவர நோக்கி ஆர்வமா ரசிகர்கள் பரவசமா வரும்போது ’ டேய் அவனுங்கள அப்படியே கொண்டு போயிடுங்கடா..என் கிட்ட வரவிட்டுடாதீங்க!’ன்னு பதறிடுவாரு!”
 நம்பியார் பற்றி மனோரமா – “ பசுத்தோல் போர்த்திய புலி”

முறையான கல்வி பெற்றிராத மனோரமா ஒரு ஜீனியஸ். ஏ.வி.எம்மில் ’ஜி’ தியேட்டரில் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ படத்தில் டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு லூப் பேசியவுடன் லைட் போட்ட போது அங்கு வந்திருக்கும் எழுத்தாளர் சுஜாதாவைப் பார்த்தவுடன் “சார்.. நீங்க இங்க ஒக்காந்திருக்கறது தெரிஞ்சிருந்தா நான் ஒழுங்கா டப்பிங் பேசியிருக்க மாட்டேன்!” என்கிறார். சுஜாதா சொல்கிறார் “ உங்களுக்கு ஒரு எழுத்தாளருக்கு உள்ள தகுதி இருக்கும்மா. சமீபத்தில் பழைய படம் ’திருமலை தென்குமரி’ பார்த்தேன்” அதில் ஒரு காட்சி பற்றி குறிப்பிட்ட சுஜாதா பிரமிப்புடன் “ அதெல்லாம் ஒரு ரைட்டரோட அப்சர்வேஷன்!” 


’சின்னத்தம்பி’ துவங்கி ‘ராசுக்குட்டி’ என்று பல படங்களில் ஓவர் சென்டிமெண்ட், ஓவர் இமோஷன் காட்சிகளில் சிரிப்பு நடிகை மனோரமாவை ரொம்ப சீரியஸாக திரையுலகம் EXPLOIT செய்திருக்கிறது.
திகட்ட திகட்ட நடிப்பை திரையில் வெளிப்படுத்தியவர். 


சி.டி.ராஜகாந்தம், அங்கமுத்து, டி.பி.முத்துலட்சுமி,
எம்.சரோஜா,சச்சு, ரமாப்ரபா,ந்திமி,கோவைசரளா போன்றோரையெல்லாம் நினைவுக்கு கொண்டு வரும்போது தான் மனோரமாவின் விஸ்வரூபத்தை உணரமுடிகிறது.
தன் நீண்ட நகைச்சுவை நடிப்பில் இவர் காட்டியிராத பரிமாணங்களை ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா, ஊர்வசி, ஷோபனா போன்றவர்கள் அனாயசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ’ஜில்ஜில் ரமாமணி’ பாத்திரத்தை ஸ்ரீப்ரியாவால் செய்யமுடியும்.

மனோரமா தன்னுள் இருந்த ’மனுஷி’யை இழந்ததேயில்லை. நான் பணிபுரிந்த  படத்தில் ஒரு துணை நடிகை கொஞ்சம் அலட்டலாக இருந்தார். தன்னைப் பற்றி அதீத ப்ரமை அவரிடம் இருந்தது. படத்தின் கடைசிக்காட்சியில் “வணக்கம்” எழுத்து தன் மீது விழுந்தால் நன்றாக இருக்கும் என்பதாக தன் ஆசையை வெளிப்படுத்தினார். இதை ஆச்சி கேள்விப்பட்டவுடன் கொந்தளித்து விட்டார். தன் அந்தஸ்துக்கு கால் தூசு பெறாத அந்த சாதாரண நடிகை மீதான கோபத்தை உடனே வெளிப்படுத்தி விட்டார். “ அவளுக்கு நினப்பப் பாரு…என்ன திமிரு..”

எஸ்.எஸ்.ஆர்  நாடகக்கதாநாயகி மனோரமா. கண்ணதாசனின் ’மாலையிட்ட மங்கை’யில் காக்கா ராதாகிருஷ்ணனுக்கு ஜோடியாக சிரிப்பு நடிகையாக அறிமுகமாகியவர். மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் மறையுமுன் கடைசியாக இயக்கிக்கொண்டிருந்த “கொஞ்சும் குமரி”யில் ஆர்.எஸ்.மனோகருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தவர்.
 நகைச்சுவை நடிகையாக சீனியர் நடிகர்கள் கே.ஏ.தங்கவேலு,சந்திரபாபு,ஏ.கருணாநிதி…பிரமாதமாக நாகேஷுடன் கொடி  கட்டி பின் சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, கவுண்டமணி என்று எத்தனை சிரிப்பு நடிகர்களுடன் கலக்கியவர்.

 நீண்ட காலமாக ஒரு வேலையை செய்யும்போது ஒரு செக்குமாட்டுத்தனம் வந்து விடும். ஆனால் ஆச்சியின் நடிப்பில் அது கிடையாது என்பது விசேஷம். அதோடு திரையில் பாடிய நடிகை. அந்தப்பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

வெளிப்புறப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள காரிலிருந்து மேக்கப்புடன் இறங்குவார். கூடியுள்ள ஜனங்கள் ’மனோரமா’ என்று முகமலர்ந்து சொல்லும்போது சுற்றிலும் பார்த்து பெருமையாக சிரிப்பார்.
அவருக்கு தமிழக முதல்வர்களாக இருந்தவர்கள், இருப்பவருடனான பாசப்பிணைப்பு பற்றி பெருமிதம் நிறைய உண்டு!
கல்யாணச்சாவுகளாக நிறைய பார்த்தாகி விட்டது.
ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது என்ற வார்த்தை CLICHE!
                                    







1 comment:

  1. இனிய தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள்.RPRJi.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.