Share

Apr 26, 2015

''ச்சீ..என்னய்யா இது கெட்டப்பு....."



இயக்குனர்களில் ரொம்ப sadist மனோபாவம் கொண்டவர்கள் உண்டு. கதாநாயக நடிகர்கள், கதா நாயகி நடிகைகள் தவிர மற்ற நடிக நடிகைகள், அஸிஸ்டண்ட் டைரக்டர், டெக்னீசியன்ஸ்,புதிதாய் நடிக்க வருகிறவர்களை இந்த டைரக்டர்கள் குதறி எடுத்து விடுவார்கள்.

மிகப்பழைய இயக்குனர் கே.சோமு- சிவாஜி, என்.டி.ராமராவையெல்லாம் சம்பூர்ண ராமாயணத்தில் இயக்கியவர்.

பட்டினத்தார் படம் டி.எம்.எஸ் கதாநாயகன். இந்தப்படம் மேஜர் சுந்தர்ராஜனுக்கு முதல் படம். ஒரே காட்சியில் தான் வருவார். ஆனால் மஹாராஜாவாக! இதற்கு மேக்கப் போட்டு விட்டு ஷாட்டுக்கு வந்தார். டி.எம்.எஸ் காம்பினேஷன். பட்டினத்தார் டி.எம்.எஸ். அமர்ந்திருக்க, அரசன் சுந்தர்ராஜன் நின்றிருக்க!

சோமு முகஞ்சுளித்து, முகத்திலடித்தாற்போல “யோவ்! என்னய்யா நடிக்கற?ச்சீ..போய்யா. யாருய்யா இந்தாள கூட்டிட்டு வந்தவன்....” கண்டபடி திட்டி அவமானப்படுத்தி விட்டார். மேக்கப் மேன் சொக்கலிங்கத்திடம் மேஜர் அழுதே விட்டார். “ நான் ஒரு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஆபிஸர். என்னை இப்படி கேவலமா திட்றாரு..” அப்போது டெலிபோன்ஸ் இன்ஸ்பெக்டராய் இருந்தார்.



“கன்னிப்பருவத்திலே” பி.வி.பாலகுருவிடம் நான் கேட்டேன். 'அந்தக்காலத்தில் குரூரமான Sadist இயக்குனர்கள் யார்?யார்?'
 அவர் வெற்றிலையை மென்று கொண்டே சொன்னார்.
“ இயக்குனர் கே.சங்கர். அப்புறம் எம்.ஏ.திருமுகம்..ரெண்டு பேரும் ரொம்ப கொடூரமான ஆளுங்க..”


பாலகுரு எம்.ஆர் ராதா நாடக்குழுவில் நடிகராய் இருந்தவர். எம்.ஜி.ஆர் நடித்த “தாழம்பூ” படத்தில் அஸிஸ்டண்ட் டைரக்டர்.ஒரு முறை ஸ்டுடியோவிற்கு நடந்து வரும்போது நடிகை அஞ்சலிதேவி வீட்டு நாய் இவரை கடித்துவிட்டதாம். பாலகுரு தேம்பித்தேம்பி அழுது விட்டார்.


“பதினாறு வயதினிலே”யில் பாரதிராஜாவின் அஸோசியேட் பாலகுரு தான் பாக்யராஜை அஸிஸ்டண்ட் ஆக சேர்த்து விட்டவர்.
பாக்யராஜ் கொடி கட்டிப்பறக்கும்போது டிஸ்கஸன்,ப்ரொஜகசஷன் என்று நள்ளிரவாகி விடும்போது ஆபிஸில் கிடைக்கிற இடத்தில் பாலகுரு தரையில் தலை வைத்துப் படுத்துத்தூங்குவார்.


பெரியவர் எம்.ஜி.சக்ரபாணியின் சம்பந்தி கே.சங்கர். எடிட்டிங் நிபுணர். ஆனால் எடிட்டிங் கத்திரிக்கோலாலே அஸிஸ்டண்ட்களை அடித்து விடுவார்.

ரா.சங்கரன் இவரிடம் அஸிஸ்டண்ட் டைரக்டராய் இருந்தவர். ‘ஆடிப்பெருக்கு’ படத்தில் “பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்” பாட்டில் ஜெமினியுடன் உட்கார்ந்து கலாட்டா செய்வார். பின்னால் பாரதிராஜாவின் ‘புதுமைப்பெண்’ணில் ரேவதிக்கு அப்பாவாக நடித்தவர். பல படங்கள் இயக்கியவர் ரா.சங்கரன்.
இவர் க்ளாப் அடிக்கும் முன் நடிகரிடம் “எங்க டைரக்டர் பயங்கரமான ஆளுய்யா! ஒழுங்கா நடிக்கலன்னா அடிச்சிடுவார்யா..பாத்துய்யா..” மிரட்டி விட்டு “பை டூ டேக் ஒன்”  க்ளாப் அடித்து விட்டு ஓடிவிடுவார். பாவம் நடிகர் மிரண்டு ஷாட்டில் சொதப்பி கே.சங்கர் நரசிம்மமாகி...


கே.சங்கர் முன் நிஜமாகவே சாட்சாத் கடவுள் பரமசிவன் கழுத்தில் நாக பாம்புடன் வந்து நின்னாலும் “யோவ் என்னய்யா இது? என்னய்யா இது கெட்டப்பு..கெட்டப்பே சரியில்லையே....ச்சீ போய்யா..டேய் கூப்ட்றா மேக் அப் மேன... ஏன்டா! இப்படி தான் மேக் அப் பண்ணுவியா.. காஸ்ட்யூமர் எங்கடா... இப்டித்தான் பரமசிவனுக்கு ட்ரஸ்ஸா.. அஸிஸ்டண்ட் டைரக்டர் வாடா... வேற ஆளே இல்லயாடா பரமசிவன் ரோலுக்கு..பாம்பு கொண்டாந்தவன் யார்ரா?”

டைரக்டர் கே.சங்கர் ஆலயமணி, ஆண்டவன் கட்டளை,மிருதங்க சக்கரவர்த்தி போன்ற சிவாஜி படங்களையும் குடியிருந்த கோயில், அடிமைப்பெண் என்று எம்.ஜி.ஆர் படங்களையும் இயக்கியவர். பின்னால் சாமி படங்கள் எடுத்து ஆன்மீகப்பட்டமெல்லாம் பெற்றார்.


சாண்டோ சின்னப்பா தேவரின் உடன் பிறந்த தம்பி தான் டைரக்டர் எம்.ஏ.திருமுகம். எத்தனை 'தேவர் பிலிம்ஸ்' எம்.ஜி.ஆர் படங்கள் .. கணக்கு போட்டுக்கொள்ள வேண்டியது தான்.

............................................................................


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.