Share

Nov 17, 2014

பாரதியுடன் ஒப்பிடப்பட்டு விட்டவர்கள்!



இலங்கை எழுத்தாளரும் தத்துவமேதையுமான மு.தளையசிங்கம் பற்றி சுந்தர ராமசாமி சொன்னார்: 'பாரதியின் கருத்துலகத்தை விட தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது.'
இது போல வெங்கட் சாமிநாதன் பற்றியும் சுரா சொன்னது : " தமிழின் மீதான அக்கறையில் வெங்கட் சுவாமிநாதனை  பாரதியுடனே மட்டுமே ஒப்பிடமுடியும்"

தமிழ் எழுத்தாளர்களில் மு.தளையசிங்கத்துடன் அந்தக்காலத்தில் கடிததொடர்பு கொண்டிருந்தவர் வெங்கட் சுவாமி நாதன் மட்டும் தான்.

'அகிலனை விடத் திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும்விட கலையின் நோக்கத்தைப் பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் பூண்டவன். அவனே மு.கருணாநிதி' என்ற தளையசிங்கத்தின் அபிப்ராயம்பற்றி  நான் சுட்டிக்காட்டிய போது வெங்கட் சாமிநாதன் ஆர்வத்துடனும் சிறிது குழப்பத்துடனும் என்னிடம் 'அப்படியே சொல்கிறாரா?'அப்படியே சொல்கிறாரா' என்று கேட்டார்.

  எம்.ஜி.ஆர். அ.தி.மு.க கட்சியை ஆரம்பித்த போது
பிரான்சில் மார்க்ஸிய தத்துவத்தை தலைகீழாக்கிய புரட்சிகர உபவர்க்கத்துடனும்,
அமெரிக்காவின் பலாத்காரங்களை எதிர்க்கும் ஹிப்பிஸுடனும் சீனாவின் புதிய மார்க்ஸீய செங்காவலர்களுடனும்
 பங்களதேஷின் கொரில்லாக்களோடும்,
பிலிப்பைன்ஸின் மார்க்கோஸ் ஆட்சியை எதிர்த்த கொரில்லாக்களோடும்
அண்ணா தி.மு.க கட்சியை தோளோடு தோள் நிறுத்தி கருணாநிதியின் நவ பாஸிச ஆட்சியை எதிர்ப்பதாக தளையசிங்கம் எழுதியிருக்கிறார்!

இந்த அபத்தத்தையும் நான் கவனப்படுத்தியிருக்கிறேன்.

12 வருடங்களுக்கு முன் இதனை நான் எழுதிய கட்டுரையில் படித்து விட்டு ஒரு பிரபல எழுத்தாளர் உடனே,உடனே, அவசரஅவசரமாக என்னிடம் கருணாநிதி பற்றி தளையசிங்கம் எந்தப் புத்தகத்தில், எந்தப் பக்கத்தில் இதனைச்சொல்லியிருக்கிறார் என்று என்னிடம்  கேட்டார்.
இது எதற்கென்றால் அப்போது அந்த பச்சோந்தி எழுத்தாளர் கருணாநிதியின் அடிவருடியாக இருந்தார். கருணாநிதியிடம் " இங்க பாருங்க! உங்களைப்பற்றி  தளையசிங்கம் எவ்வளவு பெருமையாக சொல்லியிருக்கிறார் பாருங்க!" என்று காட்டி அவரைப் புளகாங்கிதப்படுத்துவதற்காகவே என்னிடம் இந்த விபரம் கேட்டுத்தெரிந்து கொண்டார்!
'அகிலனை விடத் திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும்விட கலையின் நோக்கத்தைப் பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் பூண்டவன். அவனே மு.கருணாநிதி'

தளையசிங்கத்துடனும் வெ.சாவுடனும் பாரதியை சுந்தரராமசாமி ஒப்பிட்டார். அதற்கு முன்னமே மு.தளையசிங்கமோ பாரதியை மு.கருணாநிதியுடன் ஒப்பிட்டிருப்பதோடு, புதுமைப்பித்தனை விட, மௌனியை விடவும் கலையின்  நோக்கத்தைப்புரிந்து கொண்டவராகவும் கருணாநிதி பற்றி சொல்லியிருந்திருக்கிறார்!

கருணாநிதியின் திராவிட நச்சுக்கொள்கைகளும் அரசியல் சார்பும் அவருடைய எழுத்தை பாழ்படுத்திவிட்டன என்பதைப் பற்றியும் மு.தளையசிங்கம் குறிப்பிட்டிருக்கிறார்.



2002ல் விமலாதித்த மாமல்லனைப் பார்க்க விரும்பிய சுந்தர ராமசாமியுடன் திருச்சி கஸ்டம்ஸ் ஆபீசுக்கு போயிருந்தேன். மாமல்லன் அப்போது அங்கில்லை. அங்கிருந்த மத்திய அரசுத்துறை அதிகாரிகளுக்கு சுரா பற்றி எளிமையாகப் புரியும்படியாக விளக்க நான் இப்படிச்சொன்னேன்: ” சார், அந்தகாலத்தில் மகாகவி பாரதி போல இந்த காலத்தில் இவர். பெயர் சுந்தர ராமசாமி.”
 அதிகாரிகள் சுந்தர ராமசாமியின் கையைப் பற்றி குலுக்கினார்கள். 
“ சுந்தர ராமசாமி பற்றி நிறைய நரசிம்மன் (மாமல்லன்) சொல்லியிருக்கிறார் சார்.அடிக்கடி உங்களைப் பற்றி பேசுவார் சார்” சுந்தர ராமசாமியிடம் மாறி மாறி  சந்தோசமாக சொன்னார்கள். உடன் மாமல்லனுக்கு தகவல் தொலைபேசி மூலம் சொன்னார்கள். சுரா  தமிழ் நாடு ஓட்டலுக்கு வரச்சொன்னார்.

(விமலாதித்த மாமல்லனைப் பார்க்க கஸ்டம்ஸ் ஆபீஸுக்கு சுராவுடன் சென்ற போது நடந்த இந்த சுவாரசிய நிகழ்வைப் பற்றி கோவையில் 2007ல் நடந்த சுரா-75 புதுமைப்பித்தன் -100 பாரதி - 125 விழாவில் நான் மேடையில் பேசும்போது குறிப்பிட்டேன்!)


................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.