Share

Feb 8, 2013

வேடிக்கை தான்...




கல்ச்சர் தோன்றி சிவிலைசேஷன் தோன்றா காலத்தில் முன் தோன்றிய சூப்பர் சீனியர் தமிழ்! 

இங்கே வெளிப்படையான குடும்பக்கட்சி என்று உடனடியாகத்தெரிவது காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.

இதுல தி.மு.க குடும்ப விவகாரத்தில் குஷ்பு மூக்க நுழைக்கனுமா?
“ நான் சொன்ன கருத்தை தவறாக புரிந்துகொண்டு விட்டனர்” என்று விளக்கம் வேறு. என்னமோ நீட்ஷேயுடைய ஜரதுஷ்ட்ராவுக்கு விளக்கம் சொல்லி அதை புரிஞ்சிக்காத கட்சிக்கார ஜடங்கள் என்ற ஆயாசம்… அலுப்பு..!

மறைமுகமா ஆனந்த விகடன் நிருபர் மேல பழிய தூக்கிப் போட்டுடிச்சி!
இல்ல நிருபர் சரியாத் தான் எழுதியிருக்கார். 
படிக்கிற ஜடங்களுக்கு புரிய மாட்டேங்குதா?
’அடுத்த தலைவர் தளபதியாத்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்.’ இப்படி குஷ்பு சொன்ன பிறகு நிருபர் “அதான் ‘எனக்குப் பிறகு ஸ்டாலின்’ தான்னு கருணாநிதியே சொல்லிட்டாரே?”ன்னு கேட்டா “ தலைவர் முடிவு எடுத்துட்டாரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது”ன்னு பதில். இப்படி சொன்னப்புறம் ஸ்டாலினை சந்தித்து என்ன விளக்கம் கொடுக்க முடியும்?
தனக்கு கூட தலைவராக வாய்ப்பு இருக்குன்ற சபலம் இல்லாம இல்லை. சும்மாவா கோபாலபுரம் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு தடை போடுவாங்க. இருக்கற இடத்துக்கு விசுவாசம் வேண்டாமா? எடத்த கொடுத்தா மடத்த பிடுங்க ஆசைப்படறதா? 
மடம்னு சொல்லக்கூடாது. இது மடம் அல்ல என்று அடிக்கடி சொல்பவர்கள்

எல்லா அரசியல்வாதிக்குமே குடும்பம் தான் ரொம்ப முக்கியம். கருணாநிதி, ராமதாஸ் மட்டுமா. ப.சிதம்பரத்துக்கு, இன்னும் சோனியா, இப்படி யாருக்குத்தான் குடும்பம் முக்கியமில்ல. சொல்லுங்க.. மறைந்த மூப்பனாருக்கு குடும்பம் முக்கியம்ன்றதால தான் வாசன் இன்னக்கி மத்திய மந்திரி.
 இங்கே தி.மு.கவில கட்சியே குடும்பத்திற்காகத்தானே.
“ உலகத்துக்கே தெரியும்…..எனக்குக் கட்சிய விட சினிமாவ விடக் குடும்பம் தான் தான் முக்கியம் ‘’னு வேற பேட்டியில சொல்லுது இந்த குஷ்பு.

…..

’கடல்’ படத்தில அரவிந்த் சாமி நடிப்பு நன்றாயிருந்தது. சினிமாவில் இரண்டாவது ரவுண்டு சாமிக்கு கட்டாயம் வேண்டும். அந்த குழந்தை, பின் பையனாவது இரண்டுமே நெஞ்சைத் தொட்ட விஷயம். கார்த்திக் மகன் கௌதம்- பிரமாதமான எதிர்காலம் இருக்கும்.

கொக்கு எறிஞ்ச கல் என்று தெற்கே சொல்வார்கள். கொக்கை குறி பார்த்து எறிய பயன் பட்ட கல். ஒரு முறை அந்தக் கல்லால் ஒரு ஆள் கொக்கை அடித்து விட்டான். சமைத்து சாப்பிட்டு விட்டான். அந்தக் கல்லை கையில் வைத்துக்கொண்டு ’இந்தக் கல்லால் தான் ஒரு கொக்கை அடித்தேன். இந்தக் கல் கொக்கெறிஞ்ச கல். கொக்கை குறி பார்த்து அடித்த கல் இதே கல் தான்.’ என்று சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறான். ஏதோ ஒரு நாள் அந்தக் கல் ஒரு கொக்கை அடித்த கல். அந்தக் கல் அப்புறம் வேறு ஒரு கொக்கைக் கூட அடித்ததில்லை. அந்த அதிர்ஷ்டமான கல்லைக் கொண்டு வேறு கொக்கு ஏதாவது அடிக்க முடியுமா என்று முயற்சித்துப் பார்த்த சிலர் அது சாத்தியப்படவில்லை என்று தெரிய வந்தார்கள்.

மணிரத்னம் படம் ’கடல்’ பார்த்தப்ப இந்த ’கொக்கெறிஞ்ச கல்’ தான் ஞாபகம் வந்தது…
’பெருங்காய டப்பா’வாகிப்போவது ஸ்ரீதர் துவங்கி, பாலச்சந்தர், பாரதி ராஜா, பாக்யராஜ்- இப்படி பலருக்கு நேர்ந்த சோகம் தான். 

………………

ராஜபக்‌ஷேயை இந்திய அரசு அழைக்கிறது. பீஹார் புத்த கயாவுக்கு  வந்து தொழுது விட்டு, திருப்பதி வந்து வெங்கடாஜலபதியை சேவிக்கனுமாமே!
இலங்கைப்பிரச்னையில இந்திய அரசு, ராஜபக்‌ஷே பங்கு பற்றி இன்னமும் என்ன குழப்பம். இதுல யாரு மந்திரவாதி, யாரு ரத்தம் கக்குறவன்னு எதுக்கு குழம்பனும். மந்திரவாதியும் ரத்தங்கக்குறவனும் கூட்டு தான். என்னா நாடகம் நடத்துறானுங்க.
 லட்சம் பேரைக் கொன்று விட்டு வெங்கடாஜலபதி தரிசனம் பண்ண ஒருத்தன் வர்றான்.
ஆயிரம் எலியைத் தின்னுட்டு பூனை காசிக்குப் போச்சாம்! 

எனக்குத் தெரிஞ்சி ரெண்டு முருக பக்தர்கள். ரெண்டு பேருமே திருச்செந்தூர் முருக தரிசனம் மாதா மாதம் செய்பவர்கள். ரெண்டு பேருமே பரம எதிரிகள்! ’இவன் விளங்காத பய’ என்று அவனும் 
“ வீணாப்போனவன் ” என்று இவனும் ஒருவரையொருவர் பரஸ்பரம் தூற்றிக்கொள்பவர்கள்!
ஒவ்வொரு தடவையும் ஒரு புது பொம்பளையோடு தான் திருச்செந்தூர் போவார்கள். முதல் நாளே போய் ரூம் போட்டு தங்குவார்கள். ‘தெங்கு’வார்கள்! மறுநாள் காலை சன்னதியில் நின்று முருகா முருகா என்று உருகுவார்கள். பக்கத்தில் நிற்கிற புது பொம்பளையும் கண்மூடி பக்தி வெள்ளத்தில் மிதப்பாள். ஒரு தடவயாவது முருகக்கடவுள் “ ஏம்ப்பா… இப்படி கோவிலுக்கு என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் புதுசு புதுசா தள்ளிக்கிட்டு வர்ரீங்களேடா.. இது நல்லாவா இருக்கு..” என்று கேட்க மாட்டாரா? என்று இந்த இரண்டு முருகபக்தர்களை அறிந்தவர்கள் பேசிக்கொள்வார்கள்.


2 comments:

  1. உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

    ReplyDelete
  2. //’பெருங்காய டப்பா’// அப்படி ஆகாதா இந்திய மற்றும் ஹாலிவுட் இயக்குனர் பட்டியல் இடுங்களேன். (Stevel Speilberg, Martin Scorsese...)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.