Share

Oct 10, 2012

The Man who scared Indira Gandhi


எம்.ஜி.ஆர் தி.மு.கவிலிருந்து வெளியேறி கட்சி ஆரம்பித்து மக்கள் செல்வாக்கு பெற்று இடைத்தேர்தலில் வென்று இரண்டாம் மட்ட தலைவர்கள்   ஒவ்வொருவராக தலைவர் முதுகில் குத்தி விட்டு திமுக வை விட்டு விலகி எம்.ஜி.ஆரிடம்  சென்ற பின் கருணாநிதிக்கு விஷேச அந்தஸ்து அரசியல் உலகில் ஏற்பட்டது.

எப்போதுமே மு.கருணாநிதி தோல்வியை கண்டு துவளவே மாட்டார். அடி பட்ட புலி போல எழுவார்!

 காங்கிரசுக்கு எதிரான தேடப்பட்ட அகில இந்திய தலைவர்களுக்கு கருணாநிதி மீது ஒரு வாஞ்சை ஏற்படும்படியாக,எமர்ஜென்சி காலத்தில் இந்திராகாந்தியின் விருப்பப்படி செயல்பட மறுத்த முதல்வர் கருணாநிதியின் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

தி.மு.கவில் ஸ்டாலின் உள்பட பலர் மிசாவில் கைது செய்யப்பட்டனர்.

ஆங்கில பத்திரிக்கையொன்று அட்டைப்படத்தில் கருணாநிதி படத்தைப் போட்டு The man who scared Mrs Ganthi என்று கௌரவப்படுத்தியது.

காமராஜரை கைது செய்ய மறுத்தார் கருணாநிதி என்பது துவங்கி,தலைமறைவாக இருந்த ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் போன்றவர்களுக்கு உதவினார் என்பதாகவெல்லாம் பலவாறு கருணாநிதிக்கு புதிய அரசியல் பிம்பம். இரண்டாம் சுதந்திரப்போர் நாயகர்களாக அறியப்பட்ட ஜெயப்ரகாஷ் நாராயண்,மொரார்ஜி தேசாய்,வாஜ்பாய்,ராஜ்நாராயண்,சஞ்சீவரெட்டி,போன்றோரின்
good books ல் இடம் பெற்ற தி,மு.க தலைவர் நிஜமாகவே தமிழகத்தில் படித்தவர்கள் மத்தியில் Reasonable politician என்று மதிக்கப்பட்டார்.

தி.மு.க வில் தொண்டர்கள் கொள்கைப்பிடிப்புடன் தீவிர இயக்கப்பற்றுடன் இயங்கினர்.அப்போது தி.மு.கவில் இருந்த தொண்டர்கள் கூட எம்.ஜி.ஆர் ரசிகர்களாக முன்னர் இருந்தவர்களே.ஆனால் சினிமா மாயையில் இருந்து வெளி வந்து விட்டவர்களாக, தங்களைப் பற்றிய பெருமிதம் கொண்டிருந்தார்கள்.

பாமர ஜனங்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகவும் படித்தவர்கள் பலர் கருணாநிதி அரசியலை ஆதரிப்பவர்களாகவும் இருந்தார்கள்.

இந்திராகாந்தி திடீரென்று பொதுத்தேர்தலை அறிவித்தார். 1976ல் நடந்திருக்க வேண்டிய தேர்தல் 1977ல் நடந்தது.

அந்த தேர்தல் 1971 பாராளுமன்ற தேர்தல் போல் அல்லாமல் அரசியல் காட்சிகள் தமிழகத்தில் பெரும் காட்சி மாறுதலுடன் நடக்கவிருந்தது.

அப்போது காமராஜரின் சீடர் பா.ராமச்சந்திரன் தமிழக ஜனதாவின் தலைவர்.கிட்டத்தட்ட ஸ்தாபன காங்கிரஸுடன் திமுக கூட்டு என்று தான் சொல்லவேண்டும். இடது கம்யூனிஸ்டுகளும் இந்த கூட்டணியில்.

அப்போது கருணாநிதி திருச்சியில் பா.ராமச்சந்திரன் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம்.

திருச்சியில் கருணாநிதியின் 1977 பொதுத்தேர்தல் மேடைப்பேச்சு:

பா.ராமச்சந்திரன்,வெங்கடேஷ்வர தீட்சிதர்,பி.ராமமூர்த்தி எல்லோர் பெயரையும் மதிப்போடு குறிப்பிட்டு விட்டு கழக கண்மணிகளாம் அன்பு உடன் பிறப்புகளே(ஆரவார கூச்சல்) என்று சொல்லி ஆர்ப்பரிப்பு ஓய்ந்த பின்

“உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். நான் ராட்டை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்பதும் பா.ராமச்சந்திரன் உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்பதும்உங்களில் அனேகருக்கு வியப்பாக இருக்கலாம். வாக்களியுங்கள் என்று கேட்பது மாத்திரமல்ல. நானே பா.ராமச்சந்திரனுக்குத் தான் ராட்டை சின்னத்தில் வாக்களிக்க இருக்கிறேன்.ஆண்டாண்டு காலமாக உதய சூரியன் சின்னத்திலே வாக்களித்து வாக்களித்து பழக்கப்பட்ட இந்த கரம் இப்போது ராட்டை சின்னத்தில் பா.ராமச்சந்திரனுக்கு வாக்களிக்கப்போகிறது. அவர் மாத்திரம் என்னவாம்?(கரகோஷம்)முரசொலி மாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் தான் வாக்களிக்கப்போகிறார்.

அவசர நிலைமை பிரகடனம் செய்கிற அளவுக்கு நாட்டிற்கு என்ன ஆபத்து வந்து விட்டது. சீனத்துக்காரன் சீற்றம் கொண்டானா? பாகிஸ்தான்காரன் படையெடுத்தானா?இல்லையே! என்ன அவசியம்? ஆபத்து எதுவும் இந்தியத் திருநாட்டுக்கு இல்லை.இந்திரா காந்தியின் வீட்டுக்குத்தான்.

(கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆகிறது.)

அலகாபாத் நீதிமன்றத்திலே ஒரு நீதிபதி.சின்கா அவரது பெயர்.சொந்தக்கையாலேயே தீர்ப்பு எழுதக்கூடிய சுபாவம் கொண்டவர்! (மீண்டும் நீண்ட நேர கைத்தட்டல்)

அந்த நீதிபதி சொன்னார்”இந்திரா காந்தி தேர்தலில் ஜெயித்தது செல்லாது. அவர் இனி பத்தாண்டு தேர்தலில் நிற்கக்கூடாது.

என்ன சொன்னார். ஓராண்டு ஈராண்டல்ல! பத்தாண்டு தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றார்.

அதனால் தான் இந்திய நாடு அவசர நிலைமையை எதிர்கொள்ளவேண்டிய துர்பாக்கியம் நேர்ந்து விட்டது. இல்லை என்று மறுக்கமுடியுமா? அவசர நிலைமைக்கால கொடுமைகளை மறக்கமுடியுமா?

பாராளுமன்றத்திற்கு நடக்கவேண்டிய தேர்தல் ஈராண்டு தள்ளிப்போடப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலை ஈராண்டு தள்ளிப்போடப்பட்டது சர்வாதிகாரமல்லவாம்.அப்படி ஈராண்டு தள்ளிப்போட்ட தேர்தலை இன்று ஓராண்டிலேயே அறிவித்தது சர்வாதிகாரமல்லவாம்.நம்ப வேண்டுமாம். எதிர்பார்க்கிறார்கள்!(கைத்தட்டல்)திடீரென்று தேர்தலை அறிவித்ததே மிகப்பெரிய ஜனநாயகச்செயல் என்று இன்று வாதிக்கப்படுகிறது.(கூட்டம் ரசித்து சிரிக்கிறது)

இந்த அம்மையார் நான் முதல்வராக இருக்கும்போது அவசரநிலைமையை அறிவிக்கிறார்.காமராஜர் நீங்கலாக தேசத்தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்படுகிறது. நான் பெருந்தலைவர் காமராஜரை அவர் வீட்டுக்கு சென்று பார்த்தேன். அவர் விம்மி அழுதார். என்னைப் பார்த்து “தேசம் போச்சு..தேசம் போச்சு..தேசம் போச்சு..” என்று மும்முறை கூறினார்.
நான் காமராஜரை எதிர்த்து நேருக்கு நேர் அரசியல் செய்தவன்.அரசியல் எதிரி.ஆனால் காமராஜரின் முதுகில் குத்தியவன் அல்லவே. சி.சுப்ரமண்யம் கால காலமாக காமராஜருக்கு துரோகம் செய்தவர். ஆர்.வெங்கட்ராமன் காங்கிரசில் காமராஜரின் முதுகில் குத்தியவர்.

கருணாநிதி ஓட்டு கேட்டு வரலாமா? என்று கேட்கிறார்கள். நான் நீதிமன்றத்தால் இந்திரா காந்தி போல தண்டிக்கப்பட்டவனா?இந்திராகாந்தி அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்.(கைத்தட்டல்)

தண்டிக்கப்பட்ட இந்திரா காந்தி ஓட்டு கேட்டு வரலாம். ஆனால் கண்டிக்கப்படாத கருணாநிதி வரக்கூடாதா!"

விண்ணைப்பிளக்கும் கரகோஷம் நிற்க வெகு நேரமாகிறது.

.........

1977 தேர்தலில் மு.கருணாநிதிக்கு ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி தான் கிடைத்தது. வடசென்னையில் ஏ.வி.பி.ஆசைத்தம்பி மட்டும் வெற்றி பெற்றார்.
சோ கிண்டல் - வட சென்னையில் மட்டும் சுயாட்சி!

இந்திரா காந்தி ரேபரேலியில் ராஜ்நாராயணிடம் தோற்றார்.

சட்டசபைத்தேர்தலில் கருணாநிதியின் துவண்டு விடாத பேச்சு ” நடிகர் கட்சி(அதிமுக- அண்ணா திமுக என்று ரொம்ப நாள் கருணாநிதி சொல்லவே மாட்டார்.) இடது கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒரு கூட்டணி, ஜனதா கட்சி,உழைப்பாளர் கட்சி ஓர் அணி, இந்திராகாங்கிரஸ்-வலது கம்யூனிஸ்ட் இனணந்து ஓர் அணி, இவர்களெல்லாம் ஓர் அணி, நாம் தனி”!
நாம் மட்டும் தனித்து நிற்கிறோம் என்று சொல்லி 48 தொகுதிகள் வென்றார். சென்னை தி.மு.கவின் கோட்டை என்றானது. 14ல் ராதாகிருஷ்ண நகர் ( ஐசரி வேலன் அதிமுகவில் ஜெயித்த தொகுதி) நீங்கலாக 13 தொகுதிகள் கருணாநிதியின் தனிப்பட்ட செல்வாக்குக்காக!
தஞ்சையில் எட்டு தொகுதிகள். நன்றி அறிவிப்பில் சொன்னார்-”தஞ்சையிலே நஞ்சையுண்டு,புஞ்சையுண்டு,நன்கறிவேன்..நன்றியும் உண்டு என்று தெரிந்து கொண்டேன்!”

ஜனதா கட்சி மத்தியில் பதவியேற்றதும்  இந்திரா ஆதரவில் எம்.ஜி.ஆர் சிறிது தயக்கம் காட்டினார். தமிழகத்தில் தஞ்சை பாராளுமன்ற இடைத்தேர்தலில் இந்திரா காந்தி நிற்க எண்ணியபோது எம்.ஜி.ஆர் உற்சாகம் காட்டவில்லை.தயக்கம் காட்டினார்.மொரார்ஜியுடன் நல்லுறவை  அன்றைய தமிழக முதல்வர் நாடினார். இந்திரா காங்கிரஸ் சார்பில் சிங்காரவேலு தான் அன்பில் தர்மலிங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றார்.

காட்சிகள் வெகுவேகமாக மாறின. ஜனதா கட்சியில் ஒவ்வொருவரும் ஹாலிவுட் ஆக்டர்கள் போல. தனித்தன்மை மிக்க கதாநாயகர்கள் பலர் ஒரே நேரத்தில் ஒரே அணியாக எத்தனை நாள் இயங்கமுடியும்.எல்லோருமே dynamic personalities!
Too many cooks spoil tha cake!
மொரார்ஜி போய் சரண்சிங் வந்தார்!கவிழ்ந்தார்.ஏக் தீன் கா சுல்தான்!
1980ல் பாராளுமன்றத்திற்கு இடைத்தேர்தல்!
இந்திரா காந்தியும் கருணாநிதியும் தமிழகத்தில் கூட்டு.
கருணாநிதி சொன்னார்.”நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!”
இந்திரா காந்திக்கு கருணாநிதி மேல் ஒரு ரசனை இருந்தது.”எதிர்ப்பதிலும் சரி,ஆதரிப்பதிலும் சரி கருணாநிதியிடம் தெளிவு இருக்கிறது.தன் நடவடிக்கைகளில் குழப்பமில்லாதவர்.Genuine person!” என்றார்.
அந்த 1980 பாராளுமன்ற தேர்தல் எம்.ஜி.ஆருக்கெதிரான கருணாநிதியின் வெற்றி என்றே கொண்டாடப்பட்டது.
பிரதமர் இந்திரா தமிழக ஆட்சியை கலைத்தார். சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார்.

இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது மு.க வேதனையுடன் சொன்னார்-” இந்திய தீபகற்பம் இன்று கடலில் அல்ல,கண்ணீரில் மிதக்கிறது.”
........

6 comments:

  1. If I am right, Pa.Ramachandran handed over Sathyamoorthi Bhavan to Indira Congress later days.

    ReplyDelete
  2. Yes cho spewed venom for that, if my memory serves me right Mr Rajanayagam are you writing the speeches from memory or that you have those old newspapers Wonder where you can get those of JPR etc

    ReplyDelete
  3. Simulation sir! You are right,I think.
    Prabhu Rajadurai sir!
    I write from memory and I dont have any reference books!

    ReplyDelete
  4. எனக்கு படிக்கும் போது வியப்பாகத்தான் இருந்தது. உங்கள் ஞாபகத்தில் இருந்து இதை எழுதியிருக்கின்றேன் என்று சொல்வதைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. ஞாபகங்கள் தாலாட்டும் என்பது திரைப்பட வரி. இந்த ஞாபகங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது.

    ReplyDelete
  5. எந்த பதிவில் எல்லாம் கமெண்ட் இருக்கிறதோ அதில் எல்லாம் இந்த சத்தம் வருகிறது. இதுமட்டும்தான் கண்டுபிடிக்கமுடிந்த்து. அடுத்த பதிவின் கடைசி பாராவில் இதை தனியாக குறிப்பிட்டு யாராவது உதவ முடியுமா என்று கேளுங்கள்...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.