Share

Oct 7, 2012

அழியாச்சுடர் மௌனி


 
சிறுகதைத்தளத்தில் மட்டுமே சிக்கனமாக இயங்கிய படைப்பாளி.குறைந்த அளவில் 24 சிறுகதைகள்.மௌனி என்ற புனைபெயர் கூட இவராக வைத்துக் கொண்டதல்ல.கதைகளுக்கு தலைப்பு கூட இவர் வைத்ததில்லை.

தமிழில் எழுதியவர் தான் மௌனி,என்றாலும் ’தமிழில் என்ன இருக்கு’ என்று தடாலடியாக பேசுபவர்களுக்கு முன்னோடி.

பாஞ்சாலி சபதம் ஆவேசத்தில் எழுதப்பட்டதால் அது இலக்கியமல்ல என்றார்.புதுமைப்பித்தனையும் உதட்டைப்பிதுக்கி அலட்சியப்படுத்தினார்.லா.ச.ராவை ஒரு பாரா கூட படிக்க முடியவில்லை-தி.ஜானகிராமனிடம் sex பற்றி ஒரு obsession இருக்கிறது.-ஜெயகாந்தன் கதை படித்தது ஒன்று கூட நினைவில் நிற்கவில்லை- சுந்தர ராமசாமியிடம் ஒரு higher order of literary cleverness இருக்கு.ஆனா his cleverness kills the art.

மௌனியின் கதைகள் குறித்தும் எப்போதுமே இரண்டு கட்சிகள் உண்டு.

1.”மிக மேன்மையான படைப்பாளி”

2. ”சும்மா பம்மாத்து செய்தவர்”

இப்போது எப்படியோ, விசித்திரமோ,இயல்போ கல்வித்துறைப் பண்டிதர்கள் பலரும் மௌனியை அறியாதிருந்தார்கள்.

தமிழவன் ஒரு கருத்தரங்கத்தில் மௌனி பெயரை குறிப்பிட்டபோது ஒரு பேராசிரியர் தமிழ் இலக்கியத்தில் மௌனி என்ற எழுத்தாளரே கிடையாது என்று சாதித்தாராம்.

எனக்கும் இப்படி ஒரு அனுபவம்.’மௌனியை படித்திருக்கிறீர்களா?”என்று நான் கேட்டபோது ஒரு பேராசிரியர் ரொம்ப யோசித்து,நெற்றியை தடவி குழம்பி சொன்னார்

‘படித்திருப்பேன்…எவ்வளவோ படிக்கிறேன்..மௌனி படிக்காமலா இருந்திருப்பேன்?’

மௌனியை அந்த பேராசிரியர் படிக்கவேயில்லை என்பதில் ஐயமில்லை.

ஆர்.எஸ் மணி என்ற மௌனி நிறையப் பேசுகிற சுபாவம் உள்ளவர்.

சிதம்பரம் கோவிலை திருநீறுப்பட்டையுடன் வலம் வந்தவர்,சங்கராச்சாரியாரை தாண்டி ரமணரையும் ஜேகேயையும் வள்ளலாரையும் மதிக்கமுடியாதவர் என்ற தகவலை பிரமிள் தருகிறார்.

பிரமிளை வீட்டுக்குள் அழைத்துச் செல்லாமல் திண்ணையில் வைத்து மௌனி சாப்பாடு போட்டார்.பிரமிளோ மௌனியுடைய சனாதனத்துக்கு  தத்துவ முலாம் பூசினார்.

அக்ரஹாரத்து அதிசயமனிதர் வ.ரா.வை சந்திக்க கு.ப.ராவுடன் மௌனி செல்கிறார்.

”பூணூலை கழட்டி அந்த ஆணியில் மாட்டு” என்கிறார் வ.ரா

.உடனடியாக மௌனியின் பதில்” I would rather cut my cocks and put it there!”

இந்த ’பதில்’ பிரமிளுக்கு ஜாதீய நோக்கத்தை மீறிய கவித்துவமாக தெரிகிறது.

சொந்த வாழ்க்கையில் சந்தித்த புத்திர சோகங்கள் உள்ளிட்ட சொல்லொணா துயரங்கள் மௌனியை சநாதனியை மாற்றிவிட்டது என்பது ஒரு IRONY. சில ஞானிகள் சொந்த வாழ்க்கை சோகங்களினால் பகுத்தறிவு வாதிகளாக மாறியிருக்கிறார்கள்.

இளமையில் வைதீக சூழ்நிலையில் பிறந்து அடக்குமுறைகளுக்கு எதிராக மௌனி நிகழ்த்திய மீறல்- தேவிடியா வீட்டுக்கு சென்றது-சினிமா பிரபல சகோதரிகள் வரலட்சுமி,பானுமதியோடு ஏற்படுத்திக்கொண்ட தொடர்பு.

இந்த மீறலை ஏன் பூணூல் விஷயத்தில் செய்ய முடியவில்லை என்று கேட்பவர்கள் கேட்பார்கள்.

எழுத்தாளன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் உபதேசம் செய்ய எவ்வளவு பேர் புறப்பட்டாலும் மௌனி என்ற கலைஞன் உருவாகவே செய்கிறான். டி.ஹெச்.லாரன்ஸ்’படைப்பை நம்பு.படைப்பாளியை பாராதே’என்று ஏன் சொல்லவேண்டும்.

புதுமைப்பித்தன் ‘மௌனி சிறுகதையின் திருமூலர்’என்றார்.க.நா.சு எப்போதும் மௌனி பற்றி பிரமாதமாக எழுதியவர்,தி.ஜா,கரிச்சான்குஞ்சு இருவரும் மௌனியின் ரசிகர்கள்.சுந்தர ராமசாமி’மௌனி சாதித்து விட்டார்.நாங்களெல்லாம் முயற்சி செய்கிறோம்’ என்றார்.

மௌனியை glamourize செய்த பெருமை ஜெயகாந்தனுக்குத் தான் உண்டு. தான் எப்போதும் எழுதுவதற்காக உட்காரும்போது மௌனியின் ‘மாறுதல்’ என்ற கதையைப் படித்து விட்டுத்தான் எழுதுவதாக சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.ஒரு பிரபல பத்திரிக்கை பல எழுத்தாளர்களிடம் தங்களை மிகவும் பாதித்த கதைகளைப் பற்றிக் கேட்டு வெளியிட்ட போது தி.ஜானகிராமன் அவர்கள் ந.பிச்சமூர்த்தியின் “அடகு” கதையைக் குறிப்பிட்டு அதை வெளியிடச் செய்தார்.அப்போது ஜெயகாந்தன் தன்னை மிகவும் பாதித்த கதையென்று சொல்லி மௌனியின் “மாறுதல்” அந்தப்பத்திரிக்கையில் பிரசுரமாகியிருந்தது.

பின்னாளில் ஜெயகாந்தன் கதைகள் பற்றி மௌனி அலட்சியமாக பதிலளித்த பிறகு ஒரு வேடிக்கை நடந்தது. மௌனியின் ‘மாறுதல்’கதையைத் தான் எப்போதும் எழுத ஆரம்பிக்கும் முன் படித்த விஷயமானது பல் விளக்குவது போல,குளிப்பது போல ஒரு சாதாரண habitual action மட்டும் தான்.மற்றபடி மௌனியின் கதையில் inspiration எல்லாம் தனக்கு இல்லை.மௌனி கதை பற்றி உயர்வான அபிப்ராயமும் கிடையாது என்று தடாலடியாக ஜெயகாந்தன் பதிலடி கொடுத்து விட்டார்.
கு.அழகிரிசாமி “மௌனி செய்வது பம்மாத்து தான்” என்று க.நா.சு விடம் சண்டை பிடிப்பார்.மௌனி கதைகளுக்கான முன்னுரையில் க.நா.சு மறைமுகமாக அழகிரிசாமியை மூக்கறையன் என்றும் இவர் போன்றவர்களுக்கு கண்ணும் காதும் இருக்கிறதா என்றும் கூட சந்தேகம் தெரிவித்திருந்தார்.

எம்.வி.வெங்கட்ராமிடம் மௌனி “ ஒரு கதை எழுதினேன்.விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பினேன்,திருப்பி அனுப்பி விட்டார்கள்’ என்று வருத்தப்பட்டாராம்.’விகடனுக்கும் குமுதத்துக்கும் ஏன் சார் அனுப்பினீர்கள்?’ என்று வியப்புடன் கேட்டதற்கு’அவை தானே பிரபலமாக இருக்கின்றன.அதிகப்பணமும் தருவார்களே!” என்று மௌனி வெகுளியாக பதிலளித்தாராம்.

மௌனிக்கு அபின் பழக்கம் இருந்தது போல பொய் பேசும் பழக்கமும் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எம்.வி,வியின் “என் இலக்கிய நண்பர்கள்” நூலைப் படிக்கும்போது ஏற்படவே செய்கிறது.
மௌனியின் கதைகள் சில வெங்கட்ராமால் பல தடவை திருத்தம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.இலக்கண அமைதியோ தெளிவோ மௌனியிடம் இருக்காதாம். ’மனக்கோலம்’ கதையை திருத்தம் செய்து ’தேனீ’’யில் படித்த போது அக்கதையின் படைப்பாளி தானே என்பது போன்ற பெருமிதம் வெங்கட்ராமிற்கு ஏற்பட்டிருக்கிறது.மணிக்கொடியில் அவர் எழுதிய கதைகளின் தமிழும் இப்படித்தானா? என்று பி.எஸ்.ராமையாவிடம் கேட்டதற்கு ’ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்,நாங்கள் திருத்தி வெளியிட்டோம்’என்று சொன்னாராம்.

ஆல்பர்ட் ஃப்ராங்க்ளீன் என்ற அமெரிக்கன் மௌனியை’கருமேகங்களுக்கிடையில் ஒரு மின்னல்’ என்று பாராட்டி நியூயார்க்கர் பத்திரிக்கையில் இரண்டு சிறுகதைகளை மொழிபெயர்த்து பிரசுரமானது.
பெங்குவின் பதிப்பகம் சிறந்த உலகச்சிறுகதைகளில் ஒன்றாக ,மௌனியின் ‘ சாவில் பிறந்த சிருஷ்டி’ கதையை வெளியிட்டது.

ஒரு பேட்டியில் கர்நாடக சங்கீத உலகின் பீஷ்மர் செம்மங்குடி சீனிவாசய்யர் “ மௌனி என்ற பெயரில் கதை எழுதிண்டிருந்தானே மணி! அவன் என்னோட கஸின் தான்!” என்று சந்தோஷமாக சொல்லியிருந்தார்.
இது கூட மௌனியை கௌரவப்படுத்துகிற விஷயம் தான்!

 
 

 

 

6 comments:

  1. எவ்வளவு தகவல்கள் சார்..!!! கடல் மாதிரி எழுதிட்டே போறீங்க... இப்ப தான் ஒரு வாரமா படிக்க ஆரம்பிச்சேன்.. ஒரு 300 பதிவுகளுக்கு மேல் படிச்சு முடிச்சாச்சு... இலக்கியம்,சினிமா,அரசியல் இப்படி...போய்கிட்டே இருக்கு.. I feel like interacting with you in person when I read your blog... Very interesting writing style sir...! :):)

    ReplyDelete
  2. திருநீற்றுப் பட்டையுடன் சிதம்பரம் கோவிலை சுற்றி வருவது தவறா?

    ReplyDelete
  3. ராஜ் சார்,
    நானும் உலக பட ரசிகன். நீங்கள் சொன்ன இலக்கிய உலகத்தில் 13 வயதில் இருந்து திளைப்பவன்.ஆனால் நீங்கள் விநோதமாக செயல் படுகிறீர்கள்.
    சிவாஜியை பற்றி நீங்கள் எழுதும் விதம் திருப்தி தரவில்லை.விட்டு விடுங்களேன். அவரை பற்றி ஒரு தனி ப்ளாக் கூட எழுதாத நீங்கள்,ஒன்றுமே எழுத வேண்டாமே. அவரை,உயிராக ,பாவிக்கும் நாங்கள் பார்த்து கொள்கிறோம்.
    நன்றி, அன்புடன்,
    கோபால்.

    ReplyDelete
  4. ஆல்பர்ட் ஃப்ராங்க்ளீன் என்ற அமெரிக்கன் மௌனியை’கருமேகங்களுக்கிடையில் ஒரு மின்னல்’ என்று பாராட்டி நியூயார்க்கர் பத்திரிக்கையில் இரண்டு சிறுகதைகளை மொழிபெயர்த்து பிரசுரமானது.

    //

    மூன்று சிறுகதைகளைப் பிரசுரித்ததாக எங்கோ படித்த நியாபகம். இரண்டா? மூன்றா? உறுதிப்படுத்த முடியுமா அண்ணே?

    ReplyDelete
  5. சுதர்சன் தங்கள் பாராட்டுக்களுக்கு என் நன்றி.
    வெங்கடேசன் சார்! திருநீற்றுப்பட்டையுடன் சிதம்பரம் கோவிலை வலம் வருவது தவறில்லை தான். ஆனால் மௌனிக்கு அடுத்தவர் எழுதிய சிறுகதையில் ஒரு அசைவப்பயல் பிரியாணி சாப்பிட்டால் கூட குமட்டிக்கொண்டு வரும்.நீ அப்படி எழுதியிருக்கக் கூடாது என்று வெங்கட்ராமிடன் வாதம் செய்திருக்கிறார். இது தான் தவறு.
    அப்துல்லா பாய்!ஃப்ராங்க்ளின் மௌனியின் இரண்டு சிறுகதைகளை மொழிபெயர்த்தார் என்று தான் எனக்கு ஞாபகம்.
    கோபால் சார்!My intentions are genuine.மற்றவர்கள் அளவுகோல்களுக்கு கட்டுப்பட என்னால் இயலாது.எந்த நடிகரையும் வீரவணக்கம் செய்யவும் முடியாது.ஆனால் உங்கள் கமெண்ட் மிகவும் நாகரீகமாக இருப்பதற்கு என் நன்றி.

    ReplyDelete
  6. அழியாச் சுடர் என்ற
    வார்த்தைகள் எனக்கு இன்னும் பிடிபட வில்லை

    ஒன்று அணையாச் சுடர் என்று இருக்க வேண்டும் அல்லது
    அழியாச் சுவர்கள் அல்லது அழியா ஓவியமா

    விருப்பமும் நேரமும் இருந்தால் விளக்கவும்,

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.