Share

Sep 11, 2012

ஃபீல்ட விட்டே விரட்டப்போறேன்.




சினிமா சான்ஸ் தேடி அலைந்து சில படங்களில் தலை காட்டிய ராஜபார்ட் நடிகர்களின் குறியீடு தான் இந்த கதையில் வருகிற மஹாராஜா என்ற  கதாபாத்திரம்.

மஹாராஜா என்று  தனக்கு பெயர் வைத்துக்கொண்டான் அந்த சாய்பாபா தலையன்.உயரம் ரொம்ப கம்மி. ஆனால் நினப்பு சாதாரணமல்ல.
முதல் டப்பா படத்தில் வில்லன்.
ஒரு சிவகுமார் படத்தில் ஒரு நடிகைக்கு அண்ணன்.
இன்னொரு விஜயகுமார் படத்தில் ஒரு ரோல்.
அடுத்து ஒரு ஜெய்கணேஷ்  படத்தில் அவருக்கு தம்பி.


அப்புறம் ரெண்டு படங்கள் ஒரு வாரம் ஓடின. அவற்றில் ரெண்டு,மூணு கதாநாயகர்களில் ஒருவனாக இந்த மஹாராஜா!
அந்த நேரத்தில் ஒரு படத்தில் சிவாஜிக்கு தம்பியாக நடிக்க வாய்ப்பு மஹாராஜாவுக்கு கிடைத்தது. அந்த படம் ஷீட்டிங் நடக்கும்போதே சிவாஜியோடு சவாலாக இப்படி ரோல் இது வரை யாரும் செய்ததேயில்லை என்றான். தங்கபதக்கம் ஸ்ரீகாந்த் ரோல் எல்லாம் நான் இந்த படத்தில் செய்கிற ரோலுக்கு ஜுஜுபி என்றான்.
ஜெமினி,எஸ்.எஸ்.ஆர்,முத்துராமன்,நாகேஷ்,மேஜர், சிவகுமார்,விஜயகுமார்,ஜெய்கணேஷ் யாரும் சிவாஜியுடன் இப்ப நான் செய்யும் ரோல் போல செய்ததேயில்லை என்றான்.
அதில் Irony என்னவென்றால் சிவாஜி என்ற இமயமே அப்போது பெரும் சங்கடத்தில் இருந்த காலம்.
நான் சொன்னேன். “ ‘நான் சொல்லும் ரகசியம் ‘(1959) படத்தில் சிவாஜிக்கு ஈக்வலா அவருக்கு தம்பியா ஒரு நடிகர் நடிச்சார். எஸ்.ஆர்.தசரதன்.

  அதில் சிவாஜி பாட்டு-’நான் சொல்லும் ரகசியம்,பண்பான அதிசயம்
நன்றாக எண்ணிப்பாருங்க! அதை அவசியம்! அவசியம்!’

 அந்த எஸ்.ஆர்.தசரதன் பின்னாளில் இயக்குனர் ஏபிநாகராஜனுக்கு அஸிஸ்டண்ட் டைரக்டரானார்.அவருடையபுராணப்படங்களில் சின்ன சின்ன ரோல் செய்தார்.”
ம்..ம்...வாழ்க்கை காட்டும் ரகசியம்!

மஹாராஜா இந்த யதார்த்தத்தை ரசிக்கவில்லை.

மௌண்ட் ரோட்டில் அந்த சிவாஜி படத்திற்கு பேனர் வைத்தார்கள்.
வாங்க, நாம மூணு பேரும் பார்க்க போவோம் என்றான். நான்,மஹாராஜா மற்றும் அவன் ஜால்ரா ஒருவன். இந்த ஜால்ரா பின்னால் ஸ்ரீதர்,பாலசந்தர்,பாரதிராஜா ரேஞ்சில் டைரக்டராக கனவு கண்டவன்.கண்ணதாசன் இடமும் தனக்குத்தான் என அடித்து சொன்னவன்.  இந்த ஜால்ரா தன் rival என்று குறிப்பிட்டது யாரை தெரியுமா? அந்த நேரம்  பிரபலமாகிவிட்ட கே.பாக்யராஜ்!
மூவரும் கிளம்பி்னோம்.ஆட்டோவில். கதீட்ரல் ரோட்டில் இறங்கினோம்.
பேனரை பார்க்க சந்தோஷம். சிவாஜி தலை பெரிதாய்.பக்கத்தில் சுஜாதா தலை. ஒரு பக்கம் முழு ஸ்ரீவித்யா.இன்னொரு பக்கம் நம்ம மஹாராஜா!
அடடே!பரவாயில்லையே!நமக்கு தெரிஞ்ச ஆள் சிவாஜிக்கே தம்பியா நடிக்கிறானே என்று நிஜமாவே சந்தோஷமா இருக்காதா பின்னே?

சரி நடந்தே தி.நகருக்கு திரும்புவோம். நடக்க ஆரம்பித்தோம்.
‘எனக்கு ஒரு மன்மதலீலை, எனக்கு ஒரு பதினாறு வயதினிலே, எனக்கு ஒரு சிகப்பு ரோஜாக்கள், எனக்கு ஒரு கல்யாணராமன் கிடைச்சிருந்தா நான் இன்னைக்கு இருக்கற இடம்? என்ன  எனக்கு கிடைக்கல. அவனுக்கு கிடச்சிச்சி.’ என்று ஆரம்பித்தான்.

எனக்கு ’துணுக்’ என்றது.

இனிமேல் நான் இங்க  எழுதப்போற அவன் சொன்ன விஷயம் தயவு செய்து பலகீனமான நெஞ்சு உள்ளவங்க  படிக்கவே படிக்காதீங்க. இப்பவே ஜோரா ஒரு தடவ கை தட்டிட்டு விலகிக்கங்கங்கங்க...

அப்ப SUN தியேட்டர் கிட்ட நடந்துகிட்டிருந்தோம். சரியா SUN தியேட்டர் முன்னாடி நின்னான். என்னை பெருமையா பாத்தான். “தோஸ்த்!” என்றான்.
நான் அவன பாத்தேன். அவன் சொன்னான். ....
”தோஸ்த்! என் கனவெல்லாம் இப்ப தான் நனவாகுது.” என்றவன் அடுத்து பிரம்மாஸ்திரத்தை எடுத்து விட்டுட்டான்.


கமலஹாசனை ஃபீல்ட விட்டே விரட்டப்போறேன்.”

தட்றா!தட்றா!தட்றா!தட்றா!தட்றா!
ஜால்ரா பலமா கை தட்டினான்..

வாழ்க்கையில எவ்வளவோ இடிய தாங்கத்தானெ வேண்டியிருக்கு.




முந்தைய வருடம்  கமலுக்கு’கல்யாணராமன்’ வெற்றிப்படம் என்றாலும்
’ தாயில்லாமல் நானில்லை‘,’மங்கள வாத்தியம்’ ’நீலமலர்கள்’ ஆகிய படங்கள் ’ஊத்தி’க்கொண்டன.

கமலஹாசன ஃபீல்ட விட்டு விரட்டுறதுக்கு மஹாராஜா கிட்ட சில தேங்காமூடி படங்களும்(அதில் ஒன்னுல விஜயன் கதாநாயகன், இவன்ரெண்டாவது கதாநாயகன்! விஜயனோட அல்லக்கை!வேலையாள் (அதாவது மேனேஜர்) இப்ப ரீலீஸாகப் போற இந்த சிவாஜி படமும் தான்.
தேங்காமூடி படம் என்றால் பூஜையோடு மட்டும், அல்லதுஒரு ஆயிரம் அடி மட்டும் ஷூட் பண்ணி,  அல்லது ஒரு ஷெட்யூலோடு நிறுத்தப்பட்டு விடும் படங்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள்(தயாரிப்பாளர்,இயக்குனர்,கதாநாயக நடிகர்) ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.படம் நிச்சயம் ரிலீஸ் ஆகும் என்று மற்றவர்களையும் தங்களையும் கூட ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஃபைனான்ஸ் ரெடி பண்ணிக்கிட்டிருக்கோம், அடுத்த மாசம் அவுட் டோர் ஷுட்டிங் போப்போறோம்,மூணே மாசத்தில ரிலீஸ் பண்ணிடுவோம்னு அஞ்சாறு வருசம் சலிக்காம சொல்லித்தான் ஓய்வார்கள்.

சிவாஜி படம் ரிலீஸ் ஆனது....போனது. ’சின்னவயசு டி.ஆர்.மஹாலிங்கம் மாதிரி இருக்கான்யா சிவாஜிக்கு தம்பியா நடிக்கிற பய. படம்  போர்’ என்றார்கள்.இவன் ரோல் ரொம்ப சாதாரணமானது.நாடகபாணி நடிப்பு.

 அடுத்த வருடம்  விஜய காந்தும் சந்திரசேகரும் மார்க்கெட்டுக்கு வந்தாங்க. சட்டம் ஒரு இருட்டறை, பாலைவனச்சோலை ரிலீஸ்.
அப்ப நடிகர்சங்கத்தில ஒரு நிகழ்ச்சி.  நம்ம மஹாராஜா ஒரு தயாரிப்பாளர் கிட்ட சொல்றான் : ”இவனுங்க ரெண்டு பேரும் சுதாகர்,விஜயனோட இடத்தை ஃபில் அப் பண்றானுங்க. நான் வரும்போது நம்ம நடிகர் திலகம் எடத்துக்குத்தான் வருவேன்!”


அப்புறம் என்ன?

பூஜையோட அம்பேல் ஆன படங்கள் நீங்கலாக அப்பப்ப விஜயகாந்த்,சந்திரசேகர்,மோகன்,சுரேஷ் படங்கள்ள சின்ன,சின்ன ரோல்  என்றுதுவங்கி பாண்டியனுக்கு தோழனா,முரளியோட நாலு நண்பர்கள்ள ஒருத்தனா,(அதுவும் டப்பா முரளி படத்தில்)கார்த்திக்குக்கு பெரியப்பாவாக,கொஞ்ச வருசம் முன்ன சரத்குமாரோட  ஒரு டப்பா படத்தில அப்பாவா,சத்யராஜுக்கு மாமாவா,பிரபுவுக்கு சித்தப்பா என்றெல்லாம் சில படங்கள் தான் நடிச்சான் பாவம்.



3 comments:

Note: Only a member of this blog may post a comment.