Share

Aug 8, 2012

என்னத்தை கன்னையா

மீள் பதிவு 22-02-2009

என்னத்தை கன்னையா "முதலாளி " படத்தில் ஒரு பிரதான பாத்திரத்தில்
(வேலைக்காரனாக!) நடித்தார். அதனால் ஆரம்ப காலங்களில் 'முதலாளி ' கன்னையா என அறியப்பட்டிருந்தார்.

"பாசம் " படத்தில் இவர் வசன உச்சரிப்பு 'ப'கரம்வார்த்தைகளை F ல் உச்சரிப்பார் . என்ன அன்பு !என்ன பாசம் !என்ன பரிவு !என்ன பக்தி! ' இதை " என்ன அன் Fu! என்ன Faசம்! என்ன Faரிவு! என்ன Fuckதி !" எம் ஆர் ராதாவை பார்த்து பிரமித்து இப்படி சொல்வார்!

கண்ணதாசனின் 'கருப்பு பணம் ' படத்தில் படதயாரிப்பாளர்.நொடித்து போனவுடன் தன் பட இயக்குனரை ஒரு பஸ் ஸ்டாப்பி்ல் பார்ப்பார. அவர் அங்கே சைட் அடித்துக்கொண்டிருப்பார் . இவர் அவரை அப்ரோச் செய்யும் போது அவர் Don’t disturb me . I am enjoying the beauty! என இவரை உதாசீனம் செய்வார் . கன்னையா You are enjoying the beauty. But I’m in Poverty! என சோகமாக சொல்வார். ஆங்கிலம் அறிந்தவர் அல்ல . ஆனால் ஆங்கில டயலாக் நன்றாக உச்சரிப்பார்.

"நான் "படத்தில் நடித்த பின் தான் " என்னத்தை கன்னையா" ஆனார் . விரக்தியான மனநிலையில் படம் முழுவதும் வந்தார்.
ராமண்ணா அடுத்த ' மூன்றெழுத்து ' படத்தில் இவரை வில்லன் ஆக்கினார்!
' ஐஸ் வச்சு கொன்னுடு ' என்று அலட்சியமா வசனம் பேசுவார்!

'சொர்க்கம்' படத்தில் நாகேஷ் இவருக்கு சொன்ன ஜோதிடம் பலித்து இவர் கோடீஸ்வரன் ஆகி நாகேஷை தேடி வருவார். ஏற்கனவே நாகேஷ் ஒரு முரடனுக்கு ஜோசியம் சொல்லி அது பலிக்காமல் அந்த முரடன் இவரை தேடி வந்து அடி வெளுத்து விட்டு போயிருப்பார. அந்த சூழலில் கன்னையா ' எங்கையா ஜோதி! மனுஷனா அவன்!" என்று நாகேஷின் ஜோதிட நிலையத்திற்குள் வரவும் நாகேஷ் ஒளிந்து கொள்வார.
கன்னையா தொடர்ந்து ' மனுஷனா அவன்! தெய்வம்! கண் கண்ட தெய்வம்!கை கொடுத்த தெய்வம்! " என்று புகழ ஆரம்பிக்கவும் நாகேஷ் மேசைக்கடியில் இருந்து சந்தோசமாக எழுந்திருப்பார்.
கன்னையா ஆச்சரியத்துடன் " ஆஹா ! நான் பார்த்த படத்திலேயும் படிச்ச புராணத்திலேயும் தெய்வம் மேலே இருந்து வரும்! ஆனா இங்கே கீழே இருந்து வருதே! ஜோதி நீ சொன்னது பலிச்சிடுச்சு. வாங்க வீட்டுக்கு. இம்பாலா கார் காத்திருக்கு ." என அவரை அழைப்பார். " வாங்க வீட்டுக்கு். இம்பாலா காத்திருக்கு " என்ற இந்த வசனத்தை பலமுறை சொல்வார் .
நாகேஷ் சலித்து " யோவ் நீ எப்ப இம்பாலா கார் வாங்கின."
கன்னையா " இன்னைக்கு தான்."
நாகேஷ் " அதான் வார்த்தைக்கு வார்த்தை இம்பாலா இம்பாலான்னு
சொல்றே "

'நம் நாடு' படத்தில் வில்லன் ரங்காராவுக்கு அசிஸ்டன்ட் . நாகையா கன்னைய்யாவிடம் ' என் வீட்டிலே பசி ஒன்னை தவிர வேறு எதுவுமே இல்லை ' எனும்போது கன்னைய்யா சொல்வார் " இருக்குன்னு சொல்ல அது ஒன்னாவுது இருக்குல்லே !போய்யா "

1970களின் முன்பகுதியில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு கலைவிழா. அன்று கமலும் என்னத்தை கன்னையாவும் நடித்த ஓரங்க நாடகம். கன்னையா மகளை கமல் ஹாசன் காதலித்து கடத்துவார். கன்னையா வீட்டு மெயினில் இருந்து ஃப்யூஸ் கட்டையை உருவி விட்டு அவருடைய காதலியை கடத்துவார் கமல். மேடையில் இருட்டு. கமல் ‘இந்தாங்க. இதெ மெயின்ல சொருகுங்க’என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆகும்போது கன்னையாவின்வெள்ளந்தியான குரல் இருட்டான மேடையில்” ஏன் தம்பி..சொருகுனா எரியுமா?”
தமுக்கம் மைதானமே அதிர்ந்தது!
கமல் ஹாசன் அப்போது கன்னையாவின் அந்த டைம் சென்ஸ் குறித்து ரொம்ப பாராட்டியிருக்கிறார்.இதை கன்னையாவே என்னிடம் சொன்னார். ஆனால் கமல் ஏன் கன்னையாவை தன் படங்களில் சரியான வாய்ப்பு கொடுத்து பயன்படுத்திக்கொள்ளவேயில்லை.

பாரதி ராஜா , மகேந்திரன் , பாக்கியராஜ் எஸ் பி முத்துராமன் போன்றவர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் இவர் இருபத்தைந்து வருடம் முன் மீண்டும் ஒரு நல்ல ரவுண்டு வந்திருப்பார் . கல்லாப்பட்டி சிங்காரம், கே கே சௌந்தர் போன்றவர்கள் போல. ஆனால் இவர் ஏனோ இவர்கள் கண்ணில் படவில்லை. கொஞ்சம் தெரியற மாதிரி போலிஸ் ரோல்' சட்டம் ஒரு இருட்டறை 'யில் செய்தார்.

தி நகர் ரோகினி இன்டர்நேஷனல் லாட்ஜில் பெருமாள் நாயுடு என்ற மீடியேட்டர் இவரிடம் என்னை அறிமுகம் செய்த போது கன்னையா வின் பழைய பட வசனங்களை நான் படபடவென்று அவரிடமே பேசிக்காட்டிய போது அசந்து போனார்.
உசிலை மணியிடம் " அழைத்தால் வருவேன் " படப்பிடிப்பின் போது ஒப்பனை அறையில் என்னைப்பற்றி ரொம்ப உயர்வாக சொன்னார் . " இந்த ராஜநாயஹம்! இவரை பார்க்கும்போது தான் எனக்கு உயிர் வாழ்வது பற்றி ஒரு நம்பிக்கைபிடிப்பு வருகிறது ."

நாகேஷ் போல இவர் ஸ்பாட் டயலாக் ஷூட்டிங் போது அடிக்கும் திறமை உள்ளவர். சுருளி ராஜன் இவர் அப்படி பேசும் வசனங்களை 'வேண்டாம் ' என ஒதுக்கும் போது என்னிடம் வேதனையுடன் " பாருங்க தம்பி . நல்ல வசனம் அவனை வெட்டி நான் பேசுனா ஒத்துக்க மாட்டேங்கிறான் " என்று அப்போது அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

அந்த காலங்களில் ஒரு சின்ன சிவப்பு வெள்ளை வலை குல்லாயுடன் அடிக்கடி டவுன் பஸ்சில் இவரை பார்க்க முடியும்.
தி நகர் பனகல் பார்க் அருகில் ஒரு முறை நடந்து வரும்போது நானும் கன்னையாவும் சந்தித்து கொண்டபோது அவர் சொன்னது இன்றும் நினைவிருக்கிறது ." உங்க பெயர் 'ராஜநாயஹம் 'நல்லா இருக்கு தம்பி ! இந்த பெயரை சினிமாவுக்காக மாத்திராதீங்க "

எம்ஜியார் படங்களில் எல்லாம் என்னத்தை கன்னையாவை பார்க்க முடியும் .
எம்ஜியார் முதல்வர் ஆகிய பின் இவருக்கு கலைமாமணி விருது கொடுக்கப்பட்டபோது எம்ஜியார் இவரை பார்த்து " இப்பவும் என்னத்தை கன்னையா தானா! எப்போ ஓஹோ கன்னையா ஆவது !?" என்று மேடையில் இவரிடம் கேட்டார்.
ஓஹோ வென்று கன்னையாவால் ஆகவே முடியவில்லை.

எம்ஜியார் இறந்து இத்தனை வருடம் கழிந்த பின் வடிவேலுவுடன் கன்னையா கலக்கி இருக்கிறார்.

6 comments:

  1. என்னத்தை கன்னையா - நல்லதொரு தொகுப்பு சார் ...

    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. Poor soul, he is lucky to have somebody like you to remember him in a special way.

    RIP

    ReplyDelete
  3. I second you Mr.Kannan.

    உங்கள் பதிவுகளை கண்ணில் படும் போதெல்லாம் தொடர்ந்து பார்வையிட்டாலும் இது போன்ற பதிவுகளுக்கு பின்னூட்டமும் அவசியமாகிறது.

    ReplyDelete
  4. எந்த நேரத்தில் பதிவிட்டீரோ!!

    அன்னாரது ஆன்மா சாந்தி அடைக!!

    ReplyDelete
  5. ஏ.வி.எம்.ராஜன் நடித்து மகளுக்காக என்றொரு படம் வந்தது. அதில் கண்ணைய்யா பணத்தை திருடனிடம் பறிகொடுத்துவிட்டு, காவல்நிலையம் வந்து புகார் கொடுப்பார். "சார்! திருடன் என் முன்னாடி வந்தான். நான் மீசையை முறுக்கினேன். அவன் கையை தட்டிவிட்டுட்டு என் மீசையை முறுக்க ஆரம்பிச்சிட்டான். என்னால வலி தாங்க முடியல, பணத்தை எல்லாம் அவன்கிட்ட கொடுத்த பிறகு தான் என் மீசையை விட்டான்" என்பார். சிறிய ரோலில் வந்தாலும் எளிமையான அழுத்தமான நடிப்பைக் கொடுக்கக் கூடியவர்.

    ReplyDelete
  6. Have a look at Dinakaran 'Vellimalar', this week. Your name was mentioned along 'Ennathe Kannaya' in the Q&A section, not sure it was a complement.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.