Share

Feb 7, 2009

கொலாப்புட்டனும் உலக அரசியலும்

கொலாப்புட்டன் டீக்கடைக்குள் உட்கார்ந்திருந்த சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க சிவப்பு துண்டு மார்க்சிஸ்ட்களுடன் பேசி கொண்டிருந்தான் . வாக்குவாதம் உட்சகதியில் ..உச்ச கதியில் ..

தோழர்பெரிசுகளுக்கு புளகாங்கிதம் தான் . ஒரு இருவது வயது இளந்தாரி உலக அரசியல் பேச கிடைத்தால் சொகம் தானே . வெத்திலையை வாயில் போட்டுக்கொண்டு வாக்குவாத சகதியில் தொடர்ந்து ஒளப்பிக்கொண்டிருந்தார்கள் .

கொலாபுட்டன் உரத்த குரலில் " ஒரு பொய் அம்பலத்துக்கு வரும்போது இன்னொரு பழியை தூக்கிபோடுறது ஷ்டாலிநிஷ்ட் தந்திரம் தானே . ரோசா லக்ஷம்பர்க் என்ன சொன்னா " உங்களுக்கு தேவை கம்யூனிசமா காட்டு மிராண்டித்தனமா" ன்னு கேட்டா . அவ தான் மனுஷி . ஒத்துக்குறேன் ஆனா கம்யூனிசம் அடிப்படையா தவறான விஷயம் . ஏன்னா ஏற்ற தாழ்வு என்பது மனிதகுலத்தின் தவிர்க்க முடியாத அம்சம். நீங்க ஒத்துக்கிறீங்களா "

வெளியே இருந்து டீக்கடைக்குள் எட்டி பார்த்து மண்டைமூக்கன் சொன்னான் " டே கொலாப்புட்டா! சமையல் கட்டுலே உங்கம்மா அஞ்சரைப்பெட்டியிலே போட்டிருந்த அஞ்சு ரூபாவை எடுத்துட்டு வந்திட்டியாமேடா . உங்கம்மா இப்ப ஜெயா ஸ்டோர் முன்னால நின்னு ஒன்ன ' பேதியிலே போயிடுவான் ,கொள்ளை இலே போயிடுவான் . அஞ்சரைபட்டிலே காசு வைக்க முடியலே .நாயி செத்து ஒழிய மாட்டேங்குது,இவனை பெத்த வயித்துலே பெரண்டையை தான் அள்ளி வச்சு கட்டனும் ' ன்னு கண்டபடி வஞ்சுகிட்டு இருக்குடா டே "

தோழர்பெருசுகள் கொலாப்புட்டனை 'ச்சே 'ன்னு ஒரு எரிச்சல் பார்வை பார்த்தார்கள்.

1 comment:

  1. "பேதியிலே (cholera) போயிடுவான் ,கொல்லையிலே போயிடுவான்" - R P ராஜநாயஹம் ஐயா, க‌டைசியில‌ ஒரு எழுத்துபிழை க‌ண்டுபிடிச்சிட்டேன். எல்லாரும் "கொல்லை"யில‌தான் சார் "போ"வாங்க‌!. இது "கொள்ளை" (plague) யில‌ போ!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.