Share

Nov 1, 2008

கோணங்கி - நாகார்ஜுனன் நட்பு

கோணங்கி எப்போதும் அவ்வப்போதைய தன் ஆதர்சங்கள் பற்றி நிறைய வெளிப்படுத்துவான. வாக்கியம் சரியாய் புரிகிறதா ?
எண்பதுகளின் துவக்கத்தில், எண்பதுகளின் முடிவில், தொண்ணூறுகளின் முடிவில் என்னிடம் பேசிய விஷயங்கள்.

எண்பதுகளின் துவக்கத்தில் என் முதல் சந்திப்பில் ' வண்ண நிலவன் தான் சார் . ஆளை பார்த்திருக்கீங்களா? ஆள் டிரஸ் அழுக்கா இருக்கும். ஆனா எழுத்து .. மன்னன் சார் '

எண்பதுகளின் கடைசியில் ' யோவ் அன்னைக்கு மௌனி!அப்புறம் பிரமிள்!அவ்வளவு தான் யா.'

தொண்ணூறுகளின் கடைசியில் ஆண்டாள் கோவில் வளாகத்தில்
 ' நாகார்ஜுனன் தான் இந்த திருப்பாவை உற்சவத்துக்கு என்னை போக சொல்லி அனுப்பினான். உனக்கு தெரியுமா? நாகார்ஜுனன் தான் இது வரை
எழுதினதே எல்லாம் Disownசெய்துட்டான். அவன் தான் யா மனுஷன். இது தாண்டா வளர்ச்சி. நாகார்ஜுனன் சொல்லிட்டாப்லே. யோவ் சங்க இலக்கியத்திலே நிறையா கவனிக்க வேண்டியது இருக்குய்யா.‘
நான் அப்போது சர்காஸ்டிக் ஆக சொன்னேன்.'டே எட்டாங்கிளாசு படிக்கும்போதே தமிழ் வாத்தியார் இதை சொல்லிட்டாரே!'


நாகார்ஜுனனை கண்டடைந்ததும் கோணங்கி என்ற தேர் நிலை சேர்ந்து விட்டது . அது தான் உண்மை .
நாகார்ஜுனன் - கோணங்கி நட்பு ரொம்ப விஷேசத்துவம் கொண்டது .
கீழே நாகார்ஜுனன் தன் ப்ளாகில் இப்போது எழுதியுள்ளதையும் கொடுத்துள்ளேன் .
1.11.08

அரைநூற்றாண்டுத் தனிமைவாசி, கோணங்கி
தற்காலத் தமிழின் அபூர்வமிக்க எழுத்துக்காரன் கோணங்கி எனப்படும் இளங்கோவுக்கு இன்று நவம்பர் முதல் நாளுடன் வயது ஐம்பது. இவருடைய எழுத்துபற்றி ஆய்வாக என்ன எழுதினாலும் சரி, அதைத்தாண்டி சில வரிகள் இப்போது எழுதியாக வேண்டும்.. 1985-ஆம் ஆண்டாக இருக்கலாம். பிரம்மராஜன் கொண்டுவந்த மீட்சி இதழில் கழுதையாவாரிகள் என்ற கதை வாசித்தபோது பொறிதட்டியது எங்கோ. இதுநாள்வரை அற்றிருந்த கதைசொல்முறை. புதுமைப்பித்தன் மற்றும் கி. ராஜநாராயணனைப் போன்றதாகத் தெரிந்து அவற்றிலிருந்து சட்டென்று பிறழும் வேகத்தை உணர்ந்தேன். இப்படி ஒரு புனைபெயரா என்றும் தோன்றியது. கரிசல்காட்டைச் சேர்ந்தவர் இந்தக் கோணங்கி என்றார் பிரம்மராஜன். இரண்டு ஆண்டுகள் கழிந்து குற்றாலத்தில் பிரம்மராஜன்-கலாப்ரியா நடத்திய பதிவுகள் முதல் அமர்வில்தான் நேரில் கண்டேன்.. உற்சாகமாகப் பேசி, அங்கிருந்தவர்களை வசியம் செய்துவிட்டார். இவர் கதைகளை விஞ்ஞானப்பூர்வமாகப் பிரித்து ஆராய வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.அதற்கான வாய்ப்பும் வந்தது. நெய்வேலியைச் சேர்ந்த வேர்கள் அமைப்பு சென்னையில் நடத்திய இலக்கிய விமர்சன அரங்குக்கு வெளியே சந்தித்தேன். இருவரும் ஏனோ உள்ளே போகவில்லை. பழைய விமர்சன மொழி ஒரு காரணமாக இருக்கலாம். புதுமைப்பித்தனின் கதைசொல்லும் முறை பற்றிக் கொஞ்சம் பேசியது நினைவிருக்கிறது. "நீங்கள்தான் நவீன எழுத்தாளர், தைர்யமாக எழுதுங்கள்" என்றேன். இவருடைய மதினிமார்கள் கதை தொகுப்பை அப்போதுதான் பாராட்டி எழுதியிருந்தேன். பாலம் என ஈழ நண்பர் கழகம் கொணர்ந்த இதழில் வெளியானது அந்தச் சிறுகட்டுரை. நவீனமும் நாட்டுப்புறமும் தொன்மமும் கலக்கும் புதியதோர் உரைநடையை உருவாக்கப்போகிறார் இவர் என்ற ஆச்சர்யமான ஹேஷ்யம் என் அந்தக்கட்டுரையில் இருந்தது...இருந்தும் அப்போது எனக்குத் தெரியவில்லை... இவர் கையால் வர இருப்பவை, ஐந்து சிறுகதைத்தொகுப்புகளும் இரண்டு நாவல்களும் இடையே தஸ்தாயெவ்ஸ்கி, நகுலன், கார்ஸியா-மார்க்வெஸ் சிறப்பிதழ்கள் உள்ளிட்ட பன்னிரண்டு கல்குதிரை இதழ்களும் என்று. இவற்றில் என் ஆக்கங்களும் ஆங்காங்கே வருமென்று.
ஓரிடத்திலும் நில்லாதவர் - நவீன ஃபாஹியான் என்ற பெயர்கொண்ட கோணங்கியின் கடந்த இருபதாண்டு அலைச்சலும் உழைப்பும் காணத்தருவது பிரமிப்பை. தன்னில் புரண்டு இணையும் மோபியஸ் சுருள்தன்மை கொண்ட இந்த ஆக்கங்களின் வாக்கியங்களில் மற்றும் கதையாடலில் சமிக்ஞைக்காடுகளாக விரிவன, வரலாறும் திணைப்பரப்பும். அந்தக்காட்டில் அலைகிற நாம் தொலைந்துபோகக்கூடும் எப்போதும். நட்பை உழைப்பாக மாற்றும் சக்தி தெரிந்தவர். சிந்தனைக்குச் சவாலான எழுத்துக்கொண்டவர். எங்கள் நட்பு ஓர் உச்சக்கட்டத்தை எய்தியது, மார்க்வெஸ் கல்குதிரை சிறப்பிதழில்.
நான் லண்டன் வந்த பிறகு எட்டாண்டுகளில் நாங்கள் சந்தித்தது ஒரே முறை. அப்படித் தொடர்பற்றுப்போனதற்குப் பொறுப்பும் நானே. இப்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டுவிட்டன தொடர்பும் விவாதமும்.
தொடர்பற்றுப்போன காலத்தில் என்னை எழுத்தாக உள்ளடக்கி அவர் சமர்ப்பணம் செய்திருப்பது, பிதிரா நாவல். அந்த நாவலின் முதற்பகுதி முல்லையில் இருந்து சில வரிகள் மட்டும் இங்கே
- நவம்பர் மாத மரத்துண்டுகள் எடுத்து...
முட்டைகள் சேகரிக்கும் தெலங்கானா காதலி செஞ்சு
குனிகிறாள் 'நவம்பர் மாத மரத்துண்டுகள் எடுத்து' செறிவுமிக்க சே குவாரா விரல்களின் தனிமைஇந்தியாவில் பன்னிரண்டு நாட்கள்அவசியமான பயணம்அழகாக மரணமடைவதில்வாழ்க்கை அர்த்தமற்றதுமூச்சு நடைதிணறும் ஆஸ்த்மாவில் முன்னாள் வைஸ்ராய் மௌண்ட்பேட்டன் மாளிகையில்ரோஜா கொடுத்த மாபெரும் விருந்தில் சே.துண்டிக்கப்படாதபோது கைகள் ஏந்துகிறகோப்பைகளில் நக்ஸல் தேயிலை ஆவிகள்கல்கத்தாவின் வறுமை வரைபடம்ஆக்ரா ரோஜா மடிப்புகளில்மறைந்திருக்கும் மரணம்புத்தகமாகி வார்த்தையாகாமல்வெற்றிடத்தில் லம்பாடிப்பெண்கள்நாவலாகும்படி ஒவ்வொரு மரத்துண்டும்எடுத்துச் சுழல்களில் நடனம்கால்தூக்கிய இசைகளின் கோடைவைரத்தில் அருகம்புல் நீரோட்டம்வருத்தும் ஷெனாய் மணம்பிரதி வறண்டு கோப்பைகளாகின்றனசுருள்பட்டு இருட்டும் ஷெனாய் மூச்சுக்குழல்ஈச்ச மரங்கள் அறிந்த கனவுப்புனைகதைஉதிர்ந்த பாதிப்பனியிலைஅறுவடைசெய்த கோதுமைநிறக்காதல்மேதி பட்டணத்தில் அனாதையாய்க் கிடக்கஆந்திரப்பழங்குடி சாரங்கிப்பாடல்கள்இசைவிரல்களில் சிவந்த முல்லைநிலம்மரவாசனைகளில் சுழலும் நெருப்புஉள்ளே உயிர்மையின் கோடைகலைந்துசெல்லகருநீலம் துடைத்த மேகங்களில்கோயா மூதாதைகளின் வெள்ளிவாத்துஉப்புப்பானைக்குள்மந்திரிக்கப்பட்ட முட்டைகள்அடியில் தற்கொலை குளிர்காலம்.

3 comments:

  1. Thalaiva... Last para புரியலையே கோணங்கி writes...

    ReplyDelete
  2. Is that Konagi who wrote "Pazhi" ?
    Long time ago I took that book from library without reading a page. At home I started reading that book. God promise I am not able to understand a thing from that. I really got such kind of feeling that I am not fit to read that kind of book.

    Can anyone have this experience ? p

    ReplyDelete
  3. as mappla i too cannot understand last para and feel unfit

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.