Share

Nov 29, 2008

வாழையடி வாழை பதிவு பற்றி நாகார்ஜுனன்

வாழையடி வாழை பதிவு பற்றி நாகார்ஜுனன்


ராஜநாயஹம்

நீங்கள் சொல்லும் ஜடிலைக்கதையை நானும் பாரதத்தில், ஆதிபர்வத்தில் ஜடிலா-கௌதமி கதை என்பதாக வாசித்திருக்கிறேன். இதே கதையை அம்பேத்கர் தம்முடைய Riddles in Hinduism புத்தகத்தில் குறிப்பிடுகிறார், அக்கால பிராமண, க்ஷத்திரியப் பெண்களுக்கு polyandry சர்வ சாதாரணம் என்பதைக் காட்ட!

பாரதத்தில் துருபதர், தம் மகள் திரௌபதி ஐவரை மணப்பது தவறு என்று பேசும்போது அங்கு வரும் வியாசர் இதுகுறித்த உரையாடலை வேண்டுகிறார். குந்தியும் ஐவரும் பங்கிடட்டும் என்ற தம் வாக்கு பலிக்க வேண்டும் என்பதாகப் பேசுகிறார். துருபதன் மகன் திருஷ்டத்யும்னன், திரௌபதி ஐவரை மணப்பதைத் தவறு என்று கருதவில்லை என்கிறார்.

ஆக, உரையாடலின்போது த்ருமர், கௌதம கோத்திரத்தில் வரும் பிராமணப்பெண் ஜடிலா (அப்படியென்றால் சடாமுடிக்காரி எனப்பொருள்) ஏழு ரிஷிகளுடன் வாழ்ந்தார் என்று கூறுவதாக என் வாசிப்பின் நினைவு. வாசித்தது, மகாபாரதம் - வடமொழி-ஹிந்தி மொழியாக்கம், ஆறு தொகுதிகளில், கீதா பிரஸ், கோரக்பூர். பதிப்பின் ஆண்டு மறந்துவிட்டது. இந்தக்கதையை, மற்ற பதிப்புக்களில் கண்டதாக சரியான நினைவில்லை.ஸ்ருயதே ஹி புராணேபி ஜடிலா நாம கௌதமி ரிஷிநயாஸீதவதி சப்த தர்மப்ரதம் வரா.. என்பது தர்மர் கூறும் ஸ்லோகம். நினைவிலிருந்து கூறுகிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

இதில் தர்மர் கூறும் புராணம் எது தெரியவில்லை... அதேபோல திரௌபதி ஹஸ்தினாபுரம் திரும்பும்போது வரவேற்கும் மக்களும் கௌதமி ஏழு ரிஷிகளுடன் இருப்பதைப் போல என்றிருக்கிறது... நிஜத்தில் ஜடிலையைப் போல பாஞ்சாலிக்கும் எழுவர்தான், ஆனால் பாஞ்சாலி க்ஷத்திரியப்பெண் - அவளை நாடியோராக எழுவர் - அதாவது பாண்டவர் ஐவர், அடுத்து விராட பர்வத்தில் கீசகன், நூற்றுவரான கௌரவர் ஏழாமவர் எனக் கொள்ளலாம்.

விராட பர்வத்தில் திரௌபதியான சைரந்தரி தனக்கு ஐந்து கந்தர்வக் கணவனமார் உண்டு என்று ராணி சுதேஷ்ணாவிடம் கூறுகிறாள். சைரந்தரியை விரும்பும் கீசகனை மடப்பள்ளிக்கார பீமன் கொல்கிறான். அப்போது பீமன் பசியோடிருப்பதாகச் சொல்வது கூடலைக் குறிப்புணர்த்துவதாகும்.பிறகு துச்சாதனன் அவளை அவைக்கு இழுத்து வருவதுடன் அவள் கோலம் ஜடிலையாகிறது.யுத்தத்தில் கிட்டும் துச்சாதனன் ரத்தம் தன் கூந்தலில் பூசி சபதம் முடிக்கிறாள். ஆக, ஜடிலையின் கதை, திரௌபதியின் கதையாக மாறுகிறது, அது ஜடிலையின் கதை என உணர்த்தப்பட்டவாறே..

அடுத்து வார்க்க்ஷியின் கதை. ததைவ முனிஜ வார்க்க்ஷி தபோபிர்பவிதாத்மநஹசங்கடாபூத் தாச ப்ராத்ர்னேகனாம்நாஹ ப்ரசேதஸஹஎன்று வார்க்க்ஷி பற்றிக் கூறுவதும் தர்மரே. பிறகுதான் வியாசர் பேசுகிறார்... திரௌபதி, திருமகளின் வடிவம் என்று கூறி ஐந்து இந்திரர்கள் கதையொன்றைச் சொல்கிறார். அதில் ஒரு இந்திரன் சாபம் பெற்று வேறு நான்கு இந்திரர்களைக் கண்டு சாப விமோசனம் பெற வேண்டி நாராயணனின் அருளுடன் முறையே தர்மதேவதை (யமன்), வாயு, இந்திரன், அஸ்வினி சகோதர்களின் புதல்வர்களாக, அதாவது பாண்டவர்களாகப் பிறந்தார்கள், நாராயண அம்சம் கொண்ட இவர்களைத் திருமகளான திரௌபதி ஏற்கலாம் என்கிறார். ஐந்துக்கும் (பாண்டவர்கள்) நூறுக்கும் இடைப்பட்ட பகு எண்ணாக வரும் பத்தில் வார்க்க்ஷியின் கதை நிற்கிறது. இந்தப் பத்து என்ற இடைப்பட்ட நிலைக்கு பாரதமும் வருகிறது. எப்போது, திரௌபதி சூதாட்டத்தில் வைக்கப்படும்போது!

(நாகார்ஜுனன்)
11/29/08



நாகார்ஜுனன் said...
இன்னும் கொஞ்சம் யோசித்ததில், திரௌபதியை நாடுவோரில் கீசகன் தவிர, கர்ணன், ஜெயத்ரதன் ஆகியோரும் உண்டு - இவர் சுயம்வரம் கைகலப்பில் முடிகிறது, பிறகு ஹஸ்தினாபுர வருகை சூதாட்டத்திலும் அவமானத்திலும் அஞ்ஞாத வாசத்திலும் முடிகின்றன, விராட பர்வம் போரில் முடிகின்றன, தூதுசெல்லும் கண்ணன் போர் என்ற சாத்தியத்துக்குச் செல்வதும் திரௌபதியைப் பார்த்த பிறகே..அடுத்து வார்க்க்ஷியின் கதை. எங்கோ நினைவிலிருந்து எழுதுகிறேன். கண்டு முனிவருயும் அவர் தவத்தைக் கலைக்க இந்திரன் அனுப்பிய அப்ஸரஸ் பிரமலோகையும் கூடியபோது உடனிருந்த மரங்கள் (வ்ருக்ஷங்கள்) எடுத்து வளர்த்த பெண்குழ்ந்தைதான் வார்க்க்ஷி. பதின்மரை மணந்த இந்தப்பெண்ணின் ஒரு மகன் தட்சன் - சிவபெருமானின் மாமனார் என்று பாகவத புராணம் கூறுவதாகத் தெரிகிறது.பிரசின்பரி என்ற அரசனின் புதல்வர் பதின்மர். இவர்கள் கடலுக்கடியில் தவம்புரிந்து வெளிவந்த போது தெரிந்த பெரும்மரங்களைக் கோபம்கொண்டு எரித்தார்கள் எனவும்அப்போது சந்திரன் இவர்கள் கோபத்தைத் தணிக்க வார்க்க்ஷியை இவர்களுக்கு மணம் புரிவித்ததாகவும் பாகவதம் கூறுகிறது என்கிறது என் வாசிப்பு நினைவு. வாசித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஓரிரு விபரங்கள் விட்டுப்போயிருக்கலாம்.
Saturday, 29 November, 2008

2 comments:

  1. இன்னும் கொஞ்சம் யோசித்ததில், திரௌபதியை நாடுவோரில் கீசகன் தவிர, கர்ணன், ஜெயத்ரதன் ஆகியோரும் உண்டு - இவர் சுயம்வரம் கைகலப்பில் முடிகிறது, பிறகு ஹஸ்தினாபுர வருகை சூதாட்டத்திலும் அவமானத்திலும் அஞ்ஞாத வாசத்திலும் முடிகின்றன,
    விராட பர்வம் போரில் முடிகின்றன, தூதுசெல்லும் கண்ணன் போர் என்ற சாத்தியத்துக்குச் செல்வதும் திரௌபதியைப் பார்த்த பிறகே..

    அடுத்து வார்க்க்ஷியின் கதை. எங்கோ நினைவிலிருந்து எழுதுகிறேன். கண்டு முனிவருயும் அவர் தவத்தைக் கலைக்க இந்திரன் அனுப்பிய அப்ஸரஸ் பிரமலோகையும் கூடியபோது உடனிருந்த மரங்கள் (வ்ருக்ஷங்கள்) எடுத்து வளர்த்த பெண்குழ்ந்தைதான் வார்க்க்ஷி. பதின்மரை மணந்த இந்தப்பெண்ணின் ஒரு மகன் தட்சன் - சிவபெருமானின் மாமனார் என்று பாகவத புராணம் கூறுவதாகத் தெரிகிறது.

    பிரசின்பரி என்ற அரசனின் புதல்வர் பதின்மர். இவர்கள் கடலுக்கடியில் தவம்புரிந்து வெளிவந்த போது தெரிந்த பெரும்மரங்களைக் கோபம்கொண்டு எரித்தார்கள் எனவும்
    அப்போது சந்திரன் இவர்கள் கோபத்தைத் தணிக்க வார்க்க்ஷியை இவர்களுக்கு மணம் புரிவித்ததாகவும் பாகவதம் கூறுகிறது என்கிறது என் வாசிப்பு நினைவு. வாசித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஓரிரு விபரங்கள் விட்டுப்போயிருக்கலாம்.

    ReplyDelete
  2. Thanks a lot, Nagarjunan Sir,

    Great!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.