Share

Nov 1, 2008

சரோஜா தேவி

சரோஜா தேவி! The most poetic Actress!

எஸ் எஸ் ஆர் சமீப குமுதம் ஒன்றில் சரோஜா தேவி அவருடைய திருமண பத்திரிகை கொடுக்க வந்த போது ' என்ன சரோஜா ? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம் என்று இருந்தேன் . இப்படி செஞ்சிட்டியே!' என்று ஜோக் அடித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
 இது பரவாயில்லை.சிவாஜி கணேசன் சரோஜா தேவியின் மாப்பிள்ளையிடமே " நான் சரோஜாவை கல்யாணம் செய்யலாம் என்று நினைச்சிகிட்டு இருந்தேன் . நீங்க முந்திட்டீங்க " என்று விவஸ்தையில்லாமல் ஜோக் அடித்து இருக்கிறார். இதை சரோஜதேவியே ஒரு பேட்டியில் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

டி ஆர் ராமண்ணா கூண்டுக்கிளி , புதுமைபித்தன் படங்களில் தான்
இயக்கிய பி.எஸ் சரோஜாவை இரண்டாவது திருமணம் செய்தார். பின்னர் தன் படத்தில் நடித்த இ வி சரோஜாவை மூன்றாவது மனைவியாக்கி கொண்டார். அடுத்து ராமண்ணா 'மணப்பந்தல் ' படத்தில் சரோஜா தேவியை கதாநாயகியாக புக் செய்தவுடன் அவருடைய அக்கா டி ஆர் ராஜகுமாரி பதறி போய் ' டே உனக்கும் சரோஜா என்ற பேருக்கும் ரொம்ப வில்லங்கம் உண்டு. இவளையும் கல்யாணம் பண்ணிடாதே. சத்தியம் செய் ' என்று சொன்னதாக சொல்வார்கள். .
சரோஜா தேவி என்ற புனை பெயரில் யாரோ ஒரு ஆள் ஆபாச கதைகள் எழுதி அந்த காலத்தில் "சரோஜா தேவி புத்தகம் " ரொம்ப பிரபலம் .சிறுவனாய் இருக்கும்போது நீதி போதனை வகுப்பில் 'வாடாமல்லி ' என்ற சரோஜாதேவி புத்தகம் படிக்கும் போது நீதி போதனை ஆசிரியரிடம் மாட்டிகொண்டேன். பின்னர் அதே ஆண்டு பள்ளியிறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழாவில் நான் ' நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ! நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே !' பாடலை ஆர்கெஸ்ட்ரா வில் பாடினேன் . வில்சன் சார் 'டே! நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே' பாட்டை பாட நம்ம ஸ்கூல்லே வேறு ஆள் இல்லையே. என்னடா இவன் பாடுறான். devil quoting the bible!' என்று விழா முடிந்தவுடன் கிண்டல் பண்ணினார்.

சரோஜா தேவி கொஞ்ச நாள் முன் முன்னாள் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா விஷயத்தில் ஏன் பயங்கரமாக மூட் அவுட் ஆகி அழுது அழுது கண்ணீர் வற்றி சிரமப்படவேண்டியிருந்தது. எவ்வளவோ வதந்திகள் நடிகைகள் பற்றி வரத்தான் செய்யும். இவர் அதைப்பற்றி ரொம்ப வேதனை பட்டிருக்க தேவையில்லை.
சாவித்திரியை மயிரிழையில் மிஞ்சி விட்டவர் சரோஜாதேவி . இவருக்கு கிடைத்த சான்ஸ் அப்படி.

எம் ஜி ஆர் கூட நடித்தவர்களில் எல்லோரையும் விட பொருத்தமாய் அமைந்த நடிகை சரோஜா தேவி மட்டுமே. நாடோடி மன்னன் துவங்கி அரசகட்டளை வரை.
 சிவாஜியின் மணியான அத்தனை படங்களிலும் 'பாக பிரிவினை ' துவங்கி ஆலயமணி ,புதிய பறவை என்று எத்தனை படங்கள். ஜெமினி கணேசன் படங்கள் 'கல்யாண பரிசு ' முதல் ' பணமா பாசமா ' வரை.ஜெமினியை 'அண்ணா' என அழைப்பார் சரோஜா தேவி.
இப்படி Platform சரோஜா தேவி தவிர பிற நடிகைகளுக்கு கிடைக்கவில்லை. அதனால் ஏனைய நடிகைகளின் பொறாமைக்கும் உள்ளானவர்.
சாவித்திரி பல சிக்கல்களை தன் வாழ்வில் சந்தித்து சிரமத்திற்கு உள்ளாகி தன் முடிவுகள் பலவற்றினால் தொழிலில் பிரச்னைகளை ஏற்படுத்தி கொண்டதால் அவரை சரோஜா தேவி ஓவர் டேக் செய்தார்.

சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா மூவரும் தமிழ் திரையின் குறிப்பிடத்தக்க சாதனையாளர்கள். நடனம் அவ்வளவாக தெரியாவிட்டாலும் தங்கள் நளினமான பாவனைகளால்,நடிப்பால் பத்மினியையே மிரட்டியவர்கள்.பத்மினியின் நடிப்பில்மிகை, செயற்கை தனம் இருந்தது.

அறுபதுகளை தமிழ் திரையுலகில் முழுமையாக ஆக்கிரமித்தவர் சரோஜா தேவி. அதற்கு பின்னர் இவர் அளவுக்கு வேறு யாருக்கும், எந்த நடிகைக்கும் மேடை கிடைத்ததில்லை. அபிநய சரஸ்வதி, கன்னடத்து கிளி.
இவருக்காக ஐம்பதுகளில் திரைப்பட சான்ஸ் தேடிய பத்மா சுப்ரமணியத்துக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். சில முயற்சிகள் சீரிய முயற்சிகள் என காலம் காட்டுகிறது.

5 comments:

  1. ஆமாம். இப்பொழுதுகூட இவர் பேட்டியைக்காண சுவையாக இருக்கும். எல்லோரிடமும் இயல்பாக ந்ன்றாக பழகுவார் போல. அதனால்தான் சிவாஜி,எம்ஜியார், ஜெமினி என யாரைப்பற்றி இப்போது உரையாடினாலும் அவர் பேச்சில் உண்மை இருக்கும். செயற்கைத்தனம் இருக்கவே இருக்காது. எம்.ஆர்.ராதா - எம்ஜியார் துப்பாக்கிச்சூடு இவர் பொருட்டுதானே???

    ReplyDelete
  2. மதன் ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டதுபோல பத்மினியின் நடிப்பில் நாட்டிய பாவ்ம் இருக்கும்.

    ReplyDelete
  3. அடிக்கடி மிமிக்ரி ஷோ பார்த்து...

    இப்ப எல்லாம் யாராவது சரோஜாதேவி பத்தி சொன்னால், "கோபால்..கோபால்.." என்று புதியபறவை படத்தில் வரும் வசனம் தான் கவனத்தில் வருகிறது.

    நாடோடிமன்னன் படத்தில் எம்.ஜீ.ஆரால் அறிமுகமாவதற்கு முன் நிறைய படங்களில் துணைநடிகையாக நடித்திருக்கிறார். என் நினைவில் உள்ளது...சிவாஜி நடித்த "தங்கமலை ரகசியம்" படத்தில் மோகினியாக வருவார்.

    ReplyDelete
  4. // எம்.ஆர்.ராதா - எம்ஜியார் துப்பாக்கிச்சூடு இவர் பொருட்டுதானே???//

    எம்.ஆர்.ராதா சம்பவம் நடந்த போது நான் பிறந்திருக்கவில்லை, ஆனால்
    அது இருவருக்கும் உள்ள அரசியல் வேறுபாடு காரணமாக நடந்தது என்று படித்த நினைவு.......எது உண்மை?

    ReplyDelete
  5. பார்த்திபன் கனவு படத்தில் வைஜயந்தி மாலா வின் தோழியாகவோ /
    பணிப்பெண்ணாகவோ நடித்திருப்பார்
    Bala Manian

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.