Share

Mar 15, 2018

Five Gundas


அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் ஒரு ’அளவான’ பெண் ஒருத்தி திடீரென்று நடந்து செல்வதை இளைய தலைமுறை பார்க்க நேர்ந்தது.
அளவான உயரம். அளவான கண், மூக்கு, முகம், இடுப்பு. ரொம்ப சிவப்பு கிடையாது. கறுப்பும் கிடையாது. மாநிறம்.
அளவான அவயவங்கள் ஒரு பெண்ணை அழகாக்கி விடுகிறது.
ஏரியாவுக்கு புது வரவு.
அங்கே நின்று கொண்டிருந்த எல்லோருக்குமே அவளை பிடித்தது. இப்படி ஒரு பெண் தான் காதலியாக வர வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
கிடார் எபி, கிடார் துரையென்று ரெண்டு பேர்.
கிடார் எபி ப்ளு பேர்ட்ஸ் ஆர்க்கெஸ்ட்ராவில் லீட் கிடாரிஸ்ட்.
நான் பாடப் பாட இவர்கள் இருவரும் கிடார் பழகினார்கள்.
அப்படி பழகியதில் கிடார் எபி மதுரையில் முக்கியமான கிடாரிஸ்ட் ஆன பின் “ நீ பாட, பாட தானே நான் கிடார் வாசிக்க பழகினேன்” என்று நன்றியுடன் என்னிடம் சொன்னான்.

இவன் அளவுக்கு கிடார் துரையால் வாத்தியத்தில் பாண்டித்யம் பெற முடியாமல் போனது.
ஆனால் இந்த ’அளவான’ பெண் விஷயத்தில் எல்லாம் கிடார் துரையால் பின் வாங்க முடியுமா?
கிட்டத்தட்ட பத்து, பன்னிரண்டு பேர் பார்த்த விநாடியில் களத்தில் இறங்க தயாராகி விட்டார்கள்.
கிடார் துரை அதன் பின் அந்தப் பெண் பார்க்க நேரும்போதெல்லாம் ரோட்டில் கிதாரில் ரிதம் வாசிக்க ஆரம்பித்தான். லீட் வாசிப்பதில் தான் அவனுக்கு சிக்கல்.
அவளை பின் தொடர்ந்து கோமஸ் பாளையத்தில் அவள் வீட்டை கண்டு பிடித்து விட்டான்.
நல்ல மார்கழி மாதம் அது.
விடிவதற்கு கொஞ்ச நேரம் முன் ’மசை கிளப்பல்’. தலைக்கு மஃப்ளர் கட்டிக்கொண்டு ஸ்வெட்டரை சட்டை மேல் போட்டுக்கொண்டு சைக்கிளில் தாட்டி வீட்டை நோக்கி ஒரு வெள்ளோட்டம் விட்டான் கிடார் துரை. பனியில் இவனுக்கு பல்லெல்லாம் தந்தி அடிக்க ஆரம்பித்து விட்டது. சரியான குளிர். வெட வெடன்னு வாடையில உடம்பு நடுங்க, நடுங்க அந்த மசை வீட்டின் வாசலில் சைக்கிளை செக் பண்ணுவது போல நிறுத்தியிருக்கிறான்.

வீட்டின் வெளி வராண்டாவில் ஐந்து கட்டிளங்காளைகள் கட்டாந்தரையில் பாய் கூட விரிக்காமல் படுத்துறங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அழகொட்ட அஞ்சு பயல்கள்.

லேசான விடியலில் இவன் மீண்டும் எண்ணிப்பார்த்திருக்கிறான். ஆமா…அஞ்சு குண்டர்கள்.. பார்த்தாலே சகோதரர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் சாயலில் தெரிகிறது.
இந்தக் கடுங்குளிரில் வெளி வராண்டா கட்டாந்தரையில் ஒரு சட்டை, ஒரு பனியன் கூட போட்டுக்கொள்ளாமல் வெறும் உடம்புடன் படுத்துறங்கும் ஐந்து குண்டர்கள்.
ஸ்வெட்டரும், தலைக்கு மஃப்ளரும் கட்டிக்கொண்டிருந்த கிடார் துரைக்கு வேர்க்க ஆரம்பித்து விட்டது.
வீட்டிற்குள் இருந்து அந்த பெண்ணின் அம்மா சமையல் கட்டிலிருந்து “ அண்ணன்கள எழுப்பி விடும்மா. விடிஞ்சிடுச்சு“ என்று சத்தமாக, வெராண்டாவை ஒட்டியிருந்த ஹாலில் தூங்கி எழுந்து நின்று கொண்டிருந்த அந்த அழகான பெண்ணிடம் சொல்லியது இவன் காதில் விழுந்திருக்கிறது. வெராண்டா, ஒரு ஹால், அடுத்து சமையல் கட்டுள்ள வீடு.
இவன் அங்கிருந்து விட்டான் ஜூட்.
டேய், Five Gundas. அஞ்சு கட்டழகர்கள் கடும்பனியில்
கட்டாந்தரையில் படுத்துத் தூங்குறாங்கெ… அவளுக்கு அஞ்சு அண்ணன்கள்.
காதல் களத்தில் இறங்க ஆசைப்பட்ட பலரும், அப்படி அதற்காக ’களப்பலி’ ஆக வேண்டுமா? என்று விவேகமாக யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அந்தப்பெண்ணின் பெயரே அதன் பிறகு அந்த ஏரியாவில் ’ஃபைவ் குண்டாஸ்’ தான். அவள் பெயர் என்னவோ? ஆனால் அவளைப் பார்த்தால், அவளை பற்றி பேசினால், அவளை அடையாளமிட ’ஃபைவ் குண்டாஸ்’.

...................................................................................

https://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_22.html